ஜல்சக்தி அமைச்சகம்
ஹரியானா முதலமைச்சருடன் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை
Posted On:
03 JUL 2020 6:29PM by PIB Chennai
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று காணொளிக் காட்சி மூலம், ஹரியானா முதலமைச்சர் திரு.மனோகர் லால் கட்டாருடன் அம்மாநிலத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மேற்கொண்ட விரிவான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஜல்சக்தி அமைச்சகம் ,கிராமங்களில் வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது தொடர்பாக பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்கல் திட்டங்களின் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. ‘’ஜல் ஜீவன் இயக்கம்’’ என்னும் முக்கியமான திட்டத்தை மத்திய அரசு மாநிலங்களின் ஒத்துழைப்புடன், நாட்டில் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் வரையறுக்கப்பட்ட அளவு தரமான குடிநீரை, சரியான கால இடைவெளியில், நீண்டகால அடிப்படையில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதத்தில், குறைந்த கட்டணத்தில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் அரசின் முயற்சி, கோவிட்-19 சூழலில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், கிராமப்புற மக்கள் பொது இடங்களில் தண்ணீருக்காகக் காத்திருந்து சிரமப்படத் தேவையில்லை.
2022-ஆம் ஆண்டுக்குள் ஹரியானாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார். குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம வீடுகளையும் கொண்டு வரும் போது, கிராமங்களில் வீடுகளின் வளாகத்துக்குள்ளேயே குழாய் இணைப்பு பெறுவதற்கு வழி ஏற்படும். அனைத்து கிராம வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் இலக்குக்கு முன்னதாகவே 2022-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் குழாய் இணைப்பு வழங்க ஹரியானா மாநிலம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பு வழங்கும் லட்சியத்தை முன்னதாகவே எட்டும் முன்னணி மாநிலங்களில் ஹரியானாவும் ஒன்றாக இருக்கும்.
ஹரியானாவில் உள்ள 28.94 லட்சம் கிராமப்புற வீடுகளில், 18.83 லட்சம் (59.36%) வீடுகளுக்கு ஏற்கனவே குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 10.11 லட்சம் வீடுகளில், 2020-21-இல் 7 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், ஒரு மாவட்டத்தில் 100 சதவீத இணைப்பு வழங்க மாநிலம் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 6,987 கிராமங்களில் 2,898 கிராமங்களில் இதனைச் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
(Release ID: 1636269)