பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

நாடு முழுவதும் குறைந்த விலையில் இயற்கை எரிவாயு கிடைக்கச் செய்வது, எரிவாயு நுகர்வோர் மத்தியில் சரிசமமான நிலையை ஏற்படுத்துவது, எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவதாக திரு.தர்மேந்திர பிரதான் பேச்சு இயற்கை எரிவாயு துறை குறித்து முதல்முறையாக சர்வதேச எரிசக்தி முகமை- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இணைந்து நடத்திய பணிமனை

Posted On: 01 JUL 2020 6:59PM by PIB Chennai

சர்வதேச எரிவாயு சந்தை அமைப்பு மாறிவரும் சூழலில், இந்தியாவில் இயற்கை எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை கட்டமைப்பது” குறித்து சர்வதேச எரிசக்தி முகமையும், இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும் இணைந்து கூட்டு காணொலி பணிமனையை இன்று நடத்தின. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு,        எஃகுத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், சர்வதேச எரிசக்தி முகமையின் செயல் இயக்குநர் டாக்டர் ஃபெய்த் பிரோல் முன்னிலையில் இந்த பணிமனை தொடங்கப்பட்டது. இதில், இந்திய எரிசக்தி கட்டமைப்பில் உள்ளவர்கள் மற்றும் எரிவாயுத் துறையின் சர்வதேச வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

தொடக்க உரையாற்றிய திரு.பிரதான், கோவிட்-19 பெருந்தொற்று சவால்கள் இருந்தபோதிலும், ஆசியாவில் எரிவாயுத் தேவையை அதிகரிக்கச் செய்வதில் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியிருப்பதாகத் தெரிவித்தார். அரசின் தொடர் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளும், எரிவாயு குழாய் கட்டமைப்பை வேகமாக ஏற்படுத்தி வருவதுமே இதற்கு காரணம் என்று அவர் கூறினார். எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை ஏற்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல், எரிவாயு கட்டமைப்பை மேம்படுத்துவதை வேகப்படுத்துதல், எரிவாயு கட்டமைப்பை வெளிப்படையாகப் பயன்படுத்த அனுமதி அளித்து எரிவாயு சந்தையை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக திரு.தர்மேந்திர பிரதான் கூறினார். தாராள எரிவாயு சந்தையை ஏற்படுத்துவதற்காக, நாட்டில் சந்தைப்படுத்துதல் மற்றும் விலைநிர்ணய கட்டுப்பாடு இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்தும் பணியில் முன்னேறி வருவதாக கூறினார். பிரதமரின் உர்ஜா கங்கா திட்டம் (Pradhan Mantri Urja Ganga - PMUG) மற்றும் இந்திராதனுஷ் வடகிழக்கு எரிவாயு தொகுப்பு திட்டங்களுக்கு அரசின் மூலதன மானிய ஆதரவைப் பெற்று, நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள புதிய சந்தைகளுக்கும் எரிவாயு தொகுப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார். நகர எரிவாயு திட்டங்களின் அளவு, 232 புவியியல் இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பரவி, நாட்டின் ஒட்டுமொத்த புவியிடங்களில் 53% பகுதிகளுக்கும், மக்கள்தொகையில் 70% பேருக்கும் கிடைத்துள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளுமே, நாட்டில் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மேதகு பிரதமரின் கனவுத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கூறினார்.

போட்டி நிறைந்த எரிவாயு சந்தைகளுக்கான உரிய வர்த்தக சூழலை ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் எரிவாயு கிடைப்பதை மேம்படுத்தவும், எரிவாயு கட்டமைப்பில் முதலீடுகளை ஈர்க்கவும் எரிவாயு குழாய் கட்டண முறையை சீர்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் கூறினார். தற்போதைய எரிவாயு குழாய்களுக்கான மண்டல அளவிலான கட்டண முறையால், எரிவாயு கிடைக்கும் தொலைதூரப் பகுதிகளிலிருந்து இயற்கை எரிவாயுவைக் கொண்டுவருவதற்காக பல்வேறு குழாய் வழிகளைப் பயன்படுத்துவதால், கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, எரிவாயு கொண்டு செல்வதற்கான கட்டணத்தில் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. குறிப்பாக, எரிவாயு கிடைக்கும் பகுதியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் புதிய எரிவாயு சந்தைகள்/ தேவை மையங்களை ஏற்படுத்துவதில் தடையாக உள்ளது.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள எரிவாயு நுகர்வோருக்கும் சமமான நிலையை ஏற்படுத்துவதற்காக, தற்போது உள்ள மண்டல அடிப்படையிலான கட்டண அமைப்பை சீராகவும், போட்டி நிறைந்ததாகவும் மாற்றுவதற்காக மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக திரு.பிரதான் கூறினார். ஒட்டுமொத்த எரிவாயு தொகுப்புக்கும் முதலீட்டை ஈர்த்து, ஒரே எரிவாயு சந்தையை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் சமமான அளவில் இயற்கை எரிவாயு கிடைப்பதை உறுதிப்படுத்தவும் புதிய கட்டண முறை வழிவகை செய்யும். புதிய கட்டண முறையால், நாடு முழுவதும் எரிவாயு கிடைப்பது மேம்படுத்தப்பட்டு, எரிவாயு அடிப்படையிலான தொழிற்சாலைகள் பயனடையும். மேலும், எளிதாக்கப்பட்ட கட்டண முறையானது, சந்தை வழிமுறை அடிப்படையில், எரிவாயு வர்த்தக பரிமாற்ற தளங்கள் மூலம், தங்களுக்குத் தேவையான எரிவாயுவை கொள்முதல் செய்து பயன்படுத்த எரிவாயுத் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும். தொழிற்சாலைகளுக்கு இடையே சமமான நிலை ஏற்படும்போது, தொழிற்சாலைகளுக்கான உள்ளீடு செலவு குறையும். மேலும், உலகளாவிய உற்பத்தி கட்டமைப்பில் போட்டியை மேம்படுத்தும். தொழிற்சாலைகளைத் தாண்டி, இந்த புதிய சீராக்கப்பட்ட கட்டண முறையானது, நகர எரிவாயு பகிர்வுத் திட்டங்களை (CGD) விரைந்து ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும். மேலும், குடிமக்களுக்கு பிஎன்ஜி/சிஎன்ஜி சேவைகளை வழங்க வழிவகை செய்யும் என்று திரு.பிரதான் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பிரோல், தனது மக்களுக்கு எரிவாயு கிடைக்கச் செய்யவும், எரிவாயு இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நீண்டகால அடிப்படையில், சர்வதேச அளவில் எரிசக்தி வழங்கும் அனைத்து தரப்பினருக்கும் மத்திய புள்ளியாக இந்தியா இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் அவர், இந்தியாவின் எரிவாயுப் பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் அளவை 6%-லிருந்து 2030-ம் ஆண்டில் 15%-ஆக அதிகரிக்கும் வகையில் மிகப்பெரும் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளதாகவும், இதனை நிறைவேற்ற சந்தை சீர்திருத்தங்கள், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறனை அதிகரிப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

சர்வதேச எரிசக்தி முகமையில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா இணைந்தது முதலே, பெட்ரோலியப் பாதுகாப்பு, எரிசக்தி திறன், புள்ளியியல் மற்றும் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவும், சர்வதேச எரிசக்தி முகமையும் இணைந்து செயல்படுகின்றன. எரிபொருள் அடிப்படையிலான பொருளாதார சூழலில், சர்வதேச எரிசக்தி முகமையும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும் இணைந்து முதல்முறையாக பணிமனையை நடத்தியுள்ளன. இந்த ஒருங்கிணைப்பின் தொடக்கம் என்பது, கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எரிசக்தி கொள்கைகளை சர்வதேச எரிசக்தி முகமை முதல்முறையாக விரிவாக மறுஆய்வு செய்யத் தொடங்கியதில் அமைந்தது. அப்போது, இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில் எரிவாயுவின் பங்கை அதிகரிக்க இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச எரிசக்தி முகமை, எரிசக்தி சந்தையை சிறப்பான முறையில் செயல்படச் செய்வது என்ற இந்தியாவின் இலக்கை நிறைவேற்ற ஆதரவளிக்கும் வகையிலான பரிந்துரைகளை வழங்கியது.

இயற்கை எரிவாயுத் துறையில் இந்தியா மற்றும் சர்வதேச எரிசக்தி முகமை இடையேயான ஒத்துழைப்பு என்பது உரிய புலமை மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டது. அதாவது, இயற்கை எரிவாயு கட்டமைப்பு, ஒழுங்குமுறை, எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரிப்பதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு வசதியை ஏற்படுத்தும் வகையில், எரிவாயு முனையங்களை உருவாக்குவது மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்வதாகும்.


(Release ID: 1635892) Visitor Counter : 226