எரிசக்தி அமைச்சகம்

உத்தேச மின்சார (திருத்தச்) சட்ட மசோதா 2020 மூலம், மின்துறையில் பெரும் மாற்றத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது

Posted On: 25 JUN 2020 4:21PM by PIB Chennai

காணொளிக்காட்சி மூலம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மின்துறை மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஆர்.கே.சிங், மின்துறையில் மேற்கொள்ளப்பட உள்ள சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் வதந்திகளுக்கும் விளக்கமளித்தார். ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பணியாற்றுவதற்காக உள்ளவர்கள் என்பதால், நுகர்வோர் நலன் சார்ந்தே இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “உத்தேச சீர்திருத்தங்கள் மின்துறையில் மேலும்

வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே கொண்டு வரப்படுவதாகவும், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை நியமிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரம் எதையும் பறிக்கும் எண்ணம் இல்லைஎன்றும்

திரு.ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண நிர்ணயம் குறித்து தெளிவுபடுத்திய மத்திய மின்துறை அமைச்சர், மின்சாரக் கட்டண நிர்ணய அதிகாரம், தொடர்ந்து மாநில மின்சார ஓழுங்குமுறை ஆணையங்களிடமே இருக்கும் என்றார். நுகர்வோர் நலனைப் பாதுகாத்து, மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதோடு, மின்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கிலேயே மின்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாகவும் அவர் கூறினார். மின்சாரத்திற்கு மானியம் வழங்குவதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என்று தெளிவுபடுத்திய அவர், மாநில அரசுகள் அவர்கள் கொடுக்க விரும்பும் அளவிற்கு மானியம் கொடுக்கலாம் என்றும், அதேவேளையில், இந்த மானிய உதவியை நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தான் வழங்க வேண்டும் என்றார். இதன் மூலம் மின்வாரியங்கள் நல்ல நிலையில் செயல்படுவதோடு, மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) மற்றும் மின்விநியோகக் கம்பி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை முறையாகப் பராமரித்து, மேம்படுத்த முடிவதோடு, கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கான தொகையை செலுத்த முடியும் என்றும், மக்களுக்குத் தரமான மின்சாரத்தை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நீடித்தப் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகத்

தேவைப்படும் மிக முக்கியமான கட்டமைப்பு வசதிகளில் ஒன்றாக மின்சாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மின்சார உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகத்தில் நாம் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம்

அடைந்துள்ளதோடு, கிராமப்புறங்களுக்கும் 100 சதவீத மின்இணைப்பு

வழங்கப்பட்டுள்ளது. எனினும், கேட்டவுடன் மின்இணைப்புப் பெறுவதில், நடைமுறைக் குறைபாடுகள், கடன் போன்ற பிரச்சினைகளும் உள்ளனர். எனவே, 2003-ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தில், மின்சார (திருத்தச்) சட்ட மசோதா 2020 என்ற பெயரில், கீழ்க்காணும் விரிவான நோக்கங்களுக்காக வரைவு மசோதா ஒன்றை மத்திய மின்துறை தயாரித்துள்ளது-

நுகர்வோர் நலன் சார்ந்து செயல்படுவதை உறுதிசெய்தல்

தொழில் தொடங்குவதை எளிதாக்குதல்

மின்துறையின் நிலைத்தன்மையை அதிகரித்தல்

பசுமை எரிசக்தியை ஊக்குவித்தல்

எனினும், உத்தேச மின்சார திருத்தச் சட்டம் குறித்து, வதந்திகள் மற்றும் தவறான எண்ணங்கள் பரப்பப்படுகின்றன. எனவே, இது குறித்த யதார்த்தத்தை விளக்க வேண்டியது அவசியமாகிறது.கூடுதல் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1634253

                                                         *****(Release ID: 1634393) Visitor Counter : 417