அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை

Posted On: 25 JUN 2020 2:06PM by PIB Chennai

சர்வதேச அளவில் புவி வெப்பமாதலின் காரணமாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது பெருமளவில் குறைந்து வருவதாக துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre of Polar and Ocean Research –NCPOR) கண்டறிந்துள்ளது.  கடலின் பனிக்கட்டி அளவு குறைவது என்பது உள்ளூர் நிலையில் நீர் ஆவியாதல், காற்றின் ஈரப்பதம், மேகமூட்டம் மற்றும் மழையின் அளவு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது.  பருவநிலை மாறுதலை மிக நுட்பமாகத் தெரிவிக்கின்ற குறியீடாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி விளங்குகிறது.  இதில் ஏற்படும் தாக்கமானது பருவநிலை அமைப்பின் பிற கூறுகளின் மீதும் எதிர் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தனது கூர்நோக்கல் ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 41 ஆண்டுகளில் ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது அதிக அளவில் குறைந்தது ஜுலை 2019இல்தான் என்று துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது.  கடந்த 40 ஆண்டுகளில் (1979 – 2018) ஒவ்வொரு பத்தாண்டுக்கும் கடலின் பனிக்கட்டி அளவு ‘-4.7%’ என்ற விகிதத்தில் குறைந்து வருகிறது.  ஆனால் ஜுலை 2019இல் இந்தக் குறைவு விகிதம் ‘-13%’ ஆக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இதே நிலை தொடருமானால் 2050ஆம் ஆண்டில் ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டியே இல்லாத நிலை ஏற்படும்.  இது மனிதகுலத்துக்கும் ,ஒட்டுமொத்தமான சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தாக அமையும்.

*****


(Release ID: 1634271) Visitor Counter : 161