நிதி அமைச்சகம்
பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் 12 மாத காலத்துக்கு சிசுக் கடன்களை உரிய தவணை முறையில் திரும்பச் செலுத்தினால் 2 சதவீத வட்டி மானியம்.
கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து சிறிய அளவு வர்த்தக நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு இந்தத் திட்டம் உதவும்.
Posted On:
24 JUN 2020 4:18PM by PIB Chennai
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் தகுதி வாய்ந்த கடனாளர்கள் பெறும் அனைத்து சிசுக்கடன் தொகைக்கும் 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது கீழ்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் கடன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் – 31 மார்ச் 2020 அன்று நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் 31 மார்ச் 2020 அன்றுள்ள படியும், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலகட்டம் வரை பாரத ரிசர்வ் வங்கி வழிமுறைகளுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்ட திரும்பி வாராக் கடன் வகைப்பாட்டில் வராத கடன்கள் இத் திட்டத்தில் அடங்கும்.
வாங்கப்பட்ட இந்தக் கடன் வாராக்கடன் வகைப்பாட்டின் கீழ் சேர்க்கப்படாத மாதங்களுக்கு கடன் வட்டி மானியம் வழங்கப்படும். NPA மாறிய பிறகு, கடன் கணக்கு திரும்பி வரும் கணக்காக மாறும் மாதங்களும் இதில் அடங்கும். கடன்களைத் தொடர்ந்து செலுத்தி வருகின்ற நபர்களுக்கு இந்தத் திட்டம் ஊக்கத்தொகை அளிப்பதாக உள்ளது.
இந்தத் திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட செலவு தோராயமாக ரூ.1,542 கோடி ஆகும். இந்தத் தொகையை இந்திய அரசு வழங்கும்.
பின்னணி
இந்தத் திட்டமானது ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு ரூ.50,000 வரை வழங்கப்படும் கடன்கள் சிசுக் கடன்கள் என்பதாகும். முத்ரா கடன்களை வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கிகள், வங்கிப்பணி சாராத நிதிநிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதிநிறுவனங்கள் போன்ற முத்ரா லிமிட்டில் பதிவு செய்துள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்குகின்றன.
தற்போதைய கோவிட்-19 நெருக்கடி, அதன் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு ஆகியன சிசு முத்ரா கடன்கள் மூலம் நிதி பெற்று செயல்படும் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தீவிரமாகப் பாதித்துள்ளன. சிறிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் மிகக் குறைவான லாபமே ஈட்ட முடியும். தற்போதைய ஊரடங்கு அந்த நிறுவனங்களின் பணப்புழக்கத்தைக் குறைத்துள்ளது.
கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு அவர்களால் நிறுவனத்தை இயக்க முடியாமல் இருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலைமையானது எதிர்காலத்தில் நிதிநிறுவனங்களில் இருந்து கடன் பெறுவதில் பிரச்சினையை ஏற்படுத்தும். 31 மார்ச் 2020 அன்றுள்ளபடி, முத்ரா கடன் சிசுப் பிரிவின் கீழ் மொத்தக் கடன் தொகை ரூ.1.62 லட்சம் கோடி அளவுக்கு 9.37 கோடி கடன் கணக்குகளில் நிலுவையில் உள்ளது.
நடைமுறையாக்கல் உத்தி
இந்தத் திட்டம் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் 12 மாதங்களுக்கு இது செயல்பாட்டில் இருக்கும்.
கோவிட்-19 ஒழுங்குமுறை செயல் தொகுப்பின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்து உள்ளவாறு சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் தவணைகளை காலம் தாழ்த்திச் செலுத்த அனுமதித்துள்ள கடன் வாங்கியவர்ளுக்கு இந்தத் திட்டமானது 12 மாத காலங்களுக்கு அதாவது செப்டம்பர் 01, 2020 முதல் ஆகஸ்ட் 31 2020 வரையான தவணை செலுத்தும் காலம் முடிந்த பிறகு தொடங்கும். கடன் பெற்றுள்ள மற்றவர்களுக்கு இந்தத் திட்டம் ஜுன் 01, 2020இல் தொடங்கி 31 மே, 2021 வரை நடப்பில் இருக்கும்.
முக்கியமான விளைவு
எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள ஒரு சூழலைச் சமாளிக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. “பிரமிடின் கடைசி வரிசையில்” உள்ள கடன் வாங்கியோருக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை நீக்குவதை அதாவது அவர்களின் கடன் செலவைக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தொழில் பிரிவினருக்குத் தேவைப்படும் நிவாரணத்தைப் போதுமான அளவில் இந்தத் திட்டம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் சிறு வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.
இந்த நெருக்கடியான சமயத்திலும் சிறிய அளவு வர்த்தகம் தொடர்ந்து நடைபெற உதவுவதன் மூலம் இந்தத் திட்டமானது பொருளாதாரத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கலுக்கு இன்றியமையாது தேவைப்படும் இந்தத் தொழில் பிரிவை புதுப்பிக்கவும் இது உதவும்.
(Release ID: 1634020)
Visitor Counter : 219
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam