வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு மாநில சுகாதாரப் பணிக்கு ரூ. 190 கோடி: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 21 JUN 2020 6:56PM by PIB Chennai

கோவிட் தொற்று பரவியுள்ள இந்த நிலையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு சுகாதார வசதிகளுக்கு ரூ. 190 கோடி அளிப்பதற்கு வடகிழக்கு மாநில மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இத்தகவலை  மக்கள் நல்வாழ்வு, பிரதமர் அலுவலகம் - மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை, பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று (ஜூன் 21) தெரிவித்தார்.

நாட்டில் உள்ள வளரத் துடிக்கும் மாவட்டங்களில் கோவிட் தொற்று குறித்தும், குறிப்பாக வடகிழக்கு மாநிலப் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். அதற்காக இணைய வழியாக நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியபோது இத்தகவலைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர், வடகிழக்கு மாநிலங்களின்வளரத் துடிக்கும்” 14 மாவட்டங்களைச் சேர்ந்த, துணை ஆணையர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அவர் பேசுகையில், “49 அடிப்படைக் காரணிகளைக் கொண்டு வளரத் துடிக்கும் மாவட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. அவற்றில் சுகாதார நிலைமை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. வளர விரும்பும் ஒவ்வொரு மாவட்டமும் அறிவியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நடைமுறையின் கீழ் முக்கிய காரணிகள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதையடுத்து, நாட்டில் சிறந்த வகையில் செயல்படும் மாவட்டத்தையும் அந்தக் காரணிகளின் அடிப்படையில் அடையாளம் காண வேண்டும்என்றார்.

கொரானா தொற்றைச் சமாளிப்பதற்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதற்கு முன்பே வடகிழக்கு மாநிலங்களுக்கான அமைச்சகம்  (Ministry of North East - DoNER) ரூ. 25 கோடியை உடனடி நிவாரணமாக அளித்துள்ளது. அதையடுத்து ரூ. 500 கோடியை சிறப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (North East Special Infrastructure Development Scheme - NEISDS) அளித்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் அசாமில் கோல்பாரா (Goalpara) மாவட்டத்தில் 100 சதவீதம், துப்ரி (Dhubri) மாவட்டத்தில் 85 சதவீதம் செயல்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டு, டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். நாடு முழுவதும் 150 மாவட்டங்கள் வளரத் துடிக்கின்றன. இத்தகைய மாவட்டங்களின் பட்டியலில் 68ஆவது இடத்தில் இருந்த கோல்பாரா மாவட்டம் ஆறு மாதங்களில் 16 இடத்துக்கு முன்னேறியுள்ளதையும் குறிப்பிட்டு அவர் பாராட்டினார்.


(Release ID: 1633320) Visitor Counter : 261