குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பொக்ரான் மண்பாண்டங்களின் பண்டைய பெருமையை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ள காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் ஆணையம்
Posted On:
21 JUN 2020 6:06PM by PIB Chennai
இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்திய ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தின் உள்ள சிறிய நகரமான பொக்ரானில் ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய மண்பாண்டங்களின் இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில், டெரக்கோட்டா எனும் சுடுமண்ணால் செய்யப்படும் பொருள்களில் சிறந்த பாரம்பரியம் கொண்ட பொக்ரானில் வசிக்கும் 80 மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 80 மின்சார மண்பாண்டத் தயாரிப்பு சக்கரங்களை காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் ஆணையம் இன்று வழங்கியது. பல பத்தாண்டுகளாக மண்பாண்டத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொக்ரானில் வசித்தாலும், அதிக வேலைப் பளு மற்றும் சந்தை ஆதரவு இல்லாமை ஆகிய காரணங்களால் மண்பாண்டத் தொழிலாளர்கள் வேறு வாழ்வாதரங்களைத் தேடத் தொடங்கினார்கள்.
மின்சார சக்கரங்களைத் தவிர, களி மண்ணைக் கலப்பதற்கு உதவும், வெறும் 8 மணி நேரத்தில் 80 கிலோ களி மண்ணைத் தயாரிக்கக் கூடிய 8 கலவை இயந்திரங்களை 10 குயவர்களைக் கொண்ட குழுக்களுக்கு காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் வழங்கியது. மண்பாண்டங்களைச் செய்வதற்காக 800 கிலோ களி மண்ணை கைகளால் தயாரிக்க 5 நாட்கள் ஆகும். கிராமத்தில் 350 நேரடி வேலைவாய்ப்புகளை காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் ஆணையம் உருவாக்கியுள்ளது. காதி மற்றும் கிராமப்புறத் தொழில்கள் ஆணையத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட 80 மண்பாண்டத் தொழிலாளர்கள் அனைவரும் நேர்த்தியான மண்பாண்டங்களைச் செய்தனர். குல்ஹரில் இருந்து பூச்சாடி, சிலைகள் மற்றும் குறுகிய வாய்ப் பகுதியைக் கொண்ட கோள வடிவிலான குப்பிகள் போன்ற பாரம்பரியப் பாத்திரங்கள் வரை இந்தப் பொருள்கள் நீண்டன. நீண்ட குழாய்களைக் கொண்ட கோப்பைகள் மற்றும் சமையலுக்குப் பயன்படும் இதர கோள வடிவிலான பாத்திரங்கள் மற்றும் அழகுப் பொருள்களும் செய்யப்பட்டன.
களி மண்ணைக் கலப்பதற்கும், மண்பாண்டப் பொருள்களைத் தயாரிப்பதற்கும் கலவை இயந்திரம் மற்றும் களிமண் கலவையைப் பக்குவப்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றை இந்தத் திட்டத்தின் கீழ் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் வழங்குகிறது. மண்பாண்டங்கள் செய்வதில் உள்ள சிரமங்களைப் போக்கியுள்ள இந்த இயந்திரங்கள் மண்பாண்டத் தொழிலாளர்களின் வருமானம் 7 முதல் 8 மடங்கு வரை உயர்வதற்கு வழி வகுத்துள்ளன.
(Release ID: 1633282)