ஜல்சக்தி அமைச்சகம்

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு அம்மாநில முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்.

Posted On: 20 JUN 2020 4:47PM by PIB Chennai

மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களுள் ஒன்றான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, உயர்ந்த லட்சியத்துடன் கூடிய இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் தொடர்பில் உள்ளார். இந்த முயற்சியில் ஒரு பகுதியாக மஹாராஷ்டிர மாநில முதல்வர் திரு உத்தவ் தாக்கரே -க்கு அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை மகாராஷ்டிர மாநிலத்தில் விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்ட அளவைப் பொறுத்தும், மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கிய தொகையின் பயன்பாட்டைப் பொறுத்தும், மாநில அரசின் பங்கைப் பொறுத்தும், மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி வருகிறது. 2019 -20ஆம் ஆண்டில் மஹாராஷ்டிர மாநிலம் 5.45 இலட்சம் இல்லங்களுக்கு குடிநீர்க் குழாய் வசதி செய்து கொடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 16.2 6 லட்சம் குழாய் இணைப்புகள் ஆகும்

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2020- 21 ஆம் ஆண்டிற்கு 1,828.92 கோடி ரூபாய் நிதிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மாநிலத்தில்  செலவழிக்கப்படாத தொகை 285.35 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. இந்தத் தொகையுடன், இந்த ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகையையும் சேர்த்து, அதனுடன் மாநிலத்தின் பங்குத் தொகையையும் சேர்த்து மொத்தம் 3,908  கோடி ரூபாய், மஹாராஷ்டிர மாநிலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இருக்கும். மேலும், 15வது நிதிஆணையம் இம்மாநிலத்திற்கு 5,827 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை, அ) குடிநீர் வழங்குதல், மழை நீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆ) சுகாதார தூய்மைப்பணிகள், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையைப் பராமரித்தல் ஆகியவற்றுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்.

தற்போதுள்ள குடிநீர் வழங்கும் குழாய் அமைப்பு முறைகளில் 8,268  அமைப்புகளை சீரமைக்கவும், அதிகரிக்கவும்,  கவனம் செலுத்துமாறும், இதன் மூலம் இந்த ஆண்டு 22.35 லட்சம் குழாய் இணைப்புகளை அளிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
 


(Release ID: 1632994) Visitor Counter : 186