நிதி ஆணையம்

குடி தண்ணீர், சுகாதார சேவைகளுக்காக மானியங்கள் வழங்குவது குறித்து நீர் வள அமைச்சகத்துடன் நிதிஆணையம் கூட்டம் நடத்தியது

Posted On: 17 JUN 2020 6:04PM by PIB Chennai

குடி தண்ணீர் மற்றும் சுகாதாரச் சேவைகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிஆணையத்தின் மானியத்தை வழங்குவது குறித்து நீர் வள (ஜல் சக்தி) அமைச்சர் திரு. கஜேந்திர சிங் மற்றும் அவரது அதிகாரிகளின் குழுவுடன் 15வது நிதிஆணையத்தின் தலைவர், திரு. என். கே. சிங் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றை இன்று நடத்தினார்கள்.

 

"மாநில நிதிஆணையம் செய்யும் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் வளங்களுக்குத் துணை நிற்கும் வகையில், ஒரு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியைப் பெருக்கத் தேவைப்படும் நடவடிக்கைகளை" பரிந்துரைக்க ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகள் அதற்கு ஆணையிடுகின்றன. இதன் அடிப்படையில், 2020-21-க்கான அறிக்கைத் தாக்கலில் ஆணையத்தின் தற்போதைய அனுபவங்கள் மற்றும் அது அளித்துள்ள பரிந்துரைகள், 2021-22 முதல் 2025-26 வரை இந்த வகை மானியங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப் போதுமானதா அல்லது மேம்படுத்துதல்/மாறுதல் தேவைப்படுகிறதா என்பதை நிதி ஆணையம் புரிந்துக் கொள்ளத் தேவைப்படுகிறது. தோராயமாக 2.5 லட்சம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் பொதுவான பிரச்சினைகள் உள்ளன என்பதும், சிறப்பான செயல்பாட்டுக்கு மாநிலங்களோடு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் நீர் வள அமைச்சகத்துக்கு ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்பதும் ஆணையத்தின் குறிப்பிடத்தகுந்த கவலைகள் ஆகும்.  

 

இந்தச் சூழலில், ஊரக அமைப்புகளில் குடிதண்ணீர் மற்றும் சுகாதாரச் சேவைகளுக்காக 15வது நிதிஆணையத்தின் மானியங்களை சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்து 17 மார்ச், 2020 அன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும், நீர் வள அமைச்சகமும் இணைந்து ஒரு கடிதத்தை மாநிலங்களுக்கு எழுதின. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குடிதண்ணீர் மற்றும் சுகாதாரத்தை தேசிய முன்னுரிமை விஷயங்களாகத் தனது இடைக்கால அறிக்கையில் 15வது நிதி ஆணையம் குறிப்பிட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து, ரூ 60,750 கோடியில் 50 சதவீதமான ரூ 30,375 கோடி தொகுப்பு-மானியங்களாக () சுகாதாரம் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிக்காமல் இருத்தலுக்கான பராமரிப்பு மற்றும் () குடிதண்ணீர் விநியோகம், மழை நீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் மறுசுழற்சி ஆகியவற்றுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதம் சுட்டிக்காட்டியது. இந்தத் தொகுப்பு-மானியங்களில் ஒரு பகுதியை மேற்கண்ட இரண்டு கூறுகளில் ஒன்றுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் ஒதுக்க வேண்டும். ஆனால், ஒரு பிரிவின் தேவைகளை எந்த கிராமப் பஞ்சாயத்தாவது முழுவதும் நிறைவேற்றி இருந்தால், நிதியை அடுத்த பிரிவுக்கு அந்த கிராமப் பஞ்சாயத்து பயன்படுத்திக் கொள்ளலாம். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் குடி தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை முழுவதும் நிறைவேற்றும் வகையில், தண்ணீர் மற்றும் சுகாதாரத்துக்கான 15வது நிதி ஆணையத்தின் மானியங்களைப் பயன்படுத்தும் போது, ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறங்கள்) ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிப்பது குறித்து அனைத்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் கவனத்துக்கும் கொண்டு வருமாறு மாநிலங்களை அந்தக் கடிதம் கேட்டுக் கொண்டது.

 

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆணையத்துக்குத் தெரியப்படுத்த விளக்கக்காட்சி ஒன்றை அளித்த நீர் வள அமைச்சகம், 15வது நிதி ஆணையத்தின் மானியங்களில்-

 

ரூ 60,750 கோடியில் 50 சதவீதமான ரூ 30,375 கோடி தொகுப்பு-மானியங்களாக, கீழ்காணும் பணிகளுக்காக ஊரக உள்ளட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது  

 

i.) குடி தண்ணீர் விநியோகம், மழை நீர் சேகரிப்பு மற்றும் தண்ணீர் மறுசுழற்சி; மற்றும்

 

ii.) சுகாதாரம் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிக்காமல் இருத்தலுக்கான பராமரிப்பு நிலை.

 

ஒரு பிரிவின் தேவைகளை எந்த கிராமப் பஞ்சாயத்தாவது முழுவதும் நிறைவேற்றி இருந்தால், நிதியை அடுத்த பிரிவுக்கு அந்த கிராமப் பஞ்சாயத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

ஜல் ஜீவன் இயக்கத்தின் இலக்குகளை எட்டுவதில் கொவிட்டுக்கு பிறகான சவால்களைப் பற்றிக் கூட்டத்தில் குறிப்பிட்ட அமைச்சகம், தண்ணீர் பற்றாக்குறை மிக்க மற்றும் தண்ணீரின் தரம் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் குடிதண்ணீர்ப் பாதுகாப்பை எட்டுவதற்கு முதலீட்டை அதிகம் ஈர்க்கும் திட்டங்களின் தேவை மற்றும் இதர விஷயங்களைப் பற்றிக் குறிப்பிட்டது.

 

தண்ணீர், சுகாதாரம், தூய்மை (WASH) சேவைகள், குடிதண்ணீர் பற்றாக்குறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கான மானியங்கள் குறித்து ஆணையத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை அமைச்சகம் வழங்கியது.

 

குடிதண்ணீர்ப் பாதுகாப்பை அடைவதற்கு 'உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான பகுதி வாரியான ஒதுக்கீடுகளின்' ஒரு பகுதியாக தோராயமாக ரூ 82000 கோடி அதற்குத் தேவைப்படும் என்று அமைச்சகம் கருதியது.

 

அடுத்த 5 வருடங்களுக்கு, அதாவது 2021-22 முதல் 2025-26 வரைக்குமான அதன் இறுதி அறிக்கையின் கடைசி முன்னோட்டத்தில், நிதி ஆணையத்தின் முழு ஆதரவையும்  இந்தத் திட்டத்துக்கு வழங்குவதாகத் தலைவர் உறுதியளித்தார். தங்களின் பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்னர் அமைச்சர் மற்றும் அவரது குழு அளித்த ஆலோசனைகள் மிகவும் கவனமாக ஆணையத்தால் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

***



(Release ID: 1632275) Visitor Counter : 454