வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்திய தரக் கவுன்சில் செயல்பாடுகளை திரு. பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.

Posted On: 12 JUN 2020 4:23PM by PIB Chennai

இந்தியாவின் எதிர்காலத்தை தரம் தான் வரையறுக்கப் போகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்திய தரக் கவுன்சிலின் செயல்பாடுகளை இன்று  காணொளிக் காட்சி மூலம் ஆய்வு செய்த திரு. கோயல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் தர அடிப்படையில், சுயசார்பு இந்தியா முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் பெறும் என்று கூறினார். தரம் குறித்த உணர்வை சாதாரண மனிதனின் அளவில் ஊற்றெடுக்கச் செய்ய வேண்டும் என்றும், நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தரக் கலாச்சாரம் ஊறிப் பரவியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்திய தரக்கவுன்சில் கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக வளர்ந்து, பல்வேறு பிரிவுகளில் தனது நடவடிக்கைகளில் அகன்று விரிந்த மேம்பாட்டைப் பெற்றுள்ளதாகப் பாராட்டிய அமைச்சர், தடையற்ற முறையில் அது பீடுநடை போடவேண்டும் என்று கூறினார். பொது முடக்கத்தின் போது, இந்திய தரக்கவுன்சில் பல முன்முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறிய  அவர், கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் தான் உண்மையான சவாலும், வாய்ப்பும் அமைந்துள்ளன என்றார். எதிர்காலம் புதிய மரபுகளுடன், புதிய வாழ்க்கை வழியைப் பயன்படுத்துவதாக இருக்கப் போகிறது என திரு. கோயல் தெரிவித்தார். சமூகம், குடும்பம், பொருளாதாரம் என மனித வாழ்க்கையின் எந்த அம்சமும், புதிய மரபுகளின் படி, தொட முடியாததாக இருக்கப்போகிறது. புதிய மரபுகள், கல்வி, சுகாதாரம், பொருள்களை வாங்குதல், சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், புதிய தர நிர்ணயத்தைக் கேட்பதாக அமையும். கொவிட்டுக்குப் பிந்தைய காலத்திற்கென, பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் சிறந்த முறைகளை ஆய்வு செய்து, நமது உள்ளூர் நிலைமைகளுக்குப் பொருத்தமானதா என்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, அவற்றைப் பின்பற்றுமாறு இந்திய தரக் கவுன்சிலை அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில், திறமைகளில் உள்ள இடைவெளியை ஆய்வு செய்து, அவற்றைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகள் பற்றி ஆலோசனை வழங்குமாறு இந்திய தரக்கவுன்சிலை அவர் வலியுறுத்தினார். அரசுத்துறையில், உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பயிற்சிக் கட்டமைப்புகள் வருங்காலத்தில் தேவைப்படாமல் போகலாம் என்று கூறிய அமைச்சர், ஆன்லைன் பயிற்சி செயல்திறன் மிக்கதாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.

தரமதிப்பீடு மற்றும் சான்றிதழ்கள் அறிவுபூர்வமானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், குளறுபடிகள் அல்லது முறைகேடுகள் செய்யமுடியாததாகவும் இருக்க வேண்டும் என்று அமைச்சர் உறுதியுடன் வலியுறுத்தினார்.


(Release ID: 1631193) Visitor Counter : 290