பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை நிறுவனமாக மாற்றுவது குறித்து ஆயுதத் தொழிற்சாலை வாரிய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது பாதுகாப்புத் துறை அமைச்சகம்

Posted On: 05 JUN 2020 7:30PM by PIB Chennai

ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை தொழில் நிறுவனமாக மாற்றுவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பைப் போக்கும் வகையில், தொழிலாளர்கள் கூட்டமைப்புகள்/ சங்கங்களுடன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.

கூடுதல் செயலாளர் (பாதுகாப்பு தளவாட உற்பத்தி) திரு.வி.எல்.கந்த ராவ் தலைமையிலான இந்தக் குழுவில், பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர், அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்புச் சங்கங்களின் கூட்டமைப்பு (CDRA), அரசிதழில் பதிவு பெற்ற இந்திய ஆயுத தொழிற்சாலைகள் அதிகாரிகள் சங்கம் (IOFGOA), அரசிதழில் பதிவு பெற்ற தேசியப் பாதுகாப்பு ‘பி’ பிரிவு அதிகாரிகள் சங்கம் (NDGBGOA) ஆகிய மூன்று சங்கங்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனைகளை நடத்தினர். தொழில் நிறுவனமாக மாற்றும் முடிவை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி செயல்படுத்த அரசு விரும்புவதாக எடுத்துரைக்கப்பட்டது. ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை 100 சதவீதம் அரசே நடத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் நிறுவனமாக  மாற்றுவதால், தொழிலாளர்களின் கூலி, சம்பளம், ஓய்வூதியப் பலன்கள், சுகாதார வசதிகள் மற்றும் பிற சேவை நலனை/பலன்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சங்கங்களின் உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறப்பட்டது.

புதிய தொழில் நிறுவனம்/நிறுவனங்களுக்கு அரசிடமிருந்து எதிர்காலத்தில் தேவைப்படும் ஆர்டர்கள் மற்றும் நிதி உதவி குறித்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

இந்த ஆலோசனை சுமூகமான முறையில் நடைபெற்றது. ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர் கூட்டமைப்புகள்/சங்கங்களை ஒருங்கிணைத்து மேலும் ஆலோசனைகளை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை உயர்மட்ட அதிகாரிகள் குழு பரிசீலித்தது. கூட்டமைப்புகள்/சங்கங்களுடனான ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.

மே 16, 2020-இல் மத்திய அரசு வெளியிட்ட சுயசார்பு பாரதம் திட்டத்தின் ஒரு அங்கமாக, ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை தொழில் நிறுவனமாக மாற்றுவதன் மூலம், ஆயுத விநியோகத்தில் அதன் தன்னாட்சி, நம்பகத்தன்மை மற்றும் திறன் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


(Release ID: 1629874) Visitor Counter : 261