புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு மத்திய அரபிக்கடலில் ‘நிசர்கா’ தீவிரப் புயல்; வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை; சிவப்பு அறிவுறுத்தல்.

Posted On: 03 JUN 2020 10:45AM by PIB Chennai

தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்/ மண்டல சிறப்பு வானிலை மையம்/ இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவு ஆகியன பின்வரும் தகவல்களை அளித்துள்ளன:

கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலவும் “நிசர்கா” புயல், கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. ஜூன் 3, 2020, இன்று காலை இந்திய நேரப்படி, 08-30 மணி நிலவரப்படி, கிழக்கு மத்திய அரபிக்கடலில் 17.6°N அட்சரேகை மற்றும் 72.3°E தீர்க்கரேகை அருகே, அலிபாக்கிலிருந்து  ( மகாராஷ்டிரா) தெற்கு – தென்மேற்கு திசையில் 130 கிலோ மீட்டர்  தொலைவிலும், மும்பையிலிருந்து (மகாராஷ்டிரா) தெற்கு-தென்மேற்கில் 170 கிலோமீட்டர் தொலைவிலும், சூரத்-திலிருந்து (குஜராத்) தெற்கு-தென்மேற்கில் 400 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

இது வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, வடக்கு மகாராஷ்டிரா கடலோரம் அலிபாக்-கின் தென்பகுதியில் (ராய்காட் மாவட்டம், மகாராஷ்டிரா) தீவிர சூறாவளிப் புயலாக ஜூன் 3-ஆம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது, அதிகபட்சம், மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

இந்தப் புயலின் நகர்வு, டாப்லர் வானிலை ரேடார்கள் மூலம் தொடர்ந்து மும்பை மற்றும் கோவாவில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.



(Release ID: 1628992) Visitor Counter : 176