ஜல்சக்தி அமைச்சகம்

2022 டிசம்பருக்குள் அனைத்து கிராமப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க மேகாலயா திட்டம்.

Posted On: 01 JUN 2020 5:51PM by PIB Chennai

மத்திய அரசு கடந்த ஆண்டு தொடங்கிய ஜல் ஜீவன் இயக்கம், 2024-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்பகுதியில் உள்ள வீடுகளுக்குக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். மாநிலங்களுடன் சேர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும், இந்தத் திட்டம் தொலைநோக்கில் , ஊரகப்பகுதி வீடுகளுக்கு நாளொன்றுக்கு தனிநபர் நுகர்வாக 55 லிட்டர் தண்ணீர் வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டது. இந்த இயக்கத்தின் இலக்கை எட்டும் வகையில், அனைத்து மாநில அரசுகளும், அவற்றின் செயலாக்கத் திட்டங்களை மத்திய அரசின் அனுமதிக்காக, குடிநீர் மற்றும் தூய்மைத்துறை செயலரின் தலைமையில் இயங்கும் தேசிய இயக்கத்துக்கு தாக்கல் செய்து வருகின்றன.

தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், அனைத்து வீடுகளுக்கும் முற்றிலும் குழாய் குடிநீர் வழங்குவதற்கான ஆண்டு செயல்திட்டத்தை ஜல்சக்தி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக மேகாலயா இன்று தாக்கல் செய்துள்ளது. 2022 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க மேகாலயா அரசு உத்தேசித்துள்ளது. மொத்தம் 5.89 லட்சம் கிராமப்பகுதி வீடுகளில், 2020-21-இல் 1.80 லட்சம் வீடுகளுக்கு குழாய் பொருத்த மாநிலம் திட்டமிட்டுள்ளது. 2020-21 –ஆம் ஆண்டில் , 1096 கிராமங்களில், முற்றிலும் குழாய்க் குடிநீர் வழங்குவதற்கு மேகாலயா திட்டமிட்டுள்ளது பாரட்டத்தக்கதாகும். ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், வீடுகளுக்குக் குழாய்  மூலம் குடிநீர் வழங்குவதில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அவற்றின் செயல்திறன் அடிப்படையில் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. 2020-21-இல் ஜல்ஜீவன் இயக்க அமலாக்கத்துக்காக மத்திய அரசு ரூ.175 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது.

 



(Release ID: 1628762) Visitor Counter : 150