பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 56 இயற்கை எரிவாயு நிலையங்களை திரு. தர்மேந்திர பிரதான் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Posted On:
29 MAY 2020 2:59PM by PIB Chennai
சுற்றுச்சூழலுக்கு உகந்த அழுத்தம் தரப்பட்ட இயற்கை எரிவாயுவைப் (சிஎன்ஜி) பயன்படுத்தும் விதமாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, உருக்குத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், இன்று ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக, 48 சிஎன்ஜி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டில் 8 இதர சிஎன்ஜி நிலையங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த 56 நிலையங்களும் , குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, புதுதில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளன. இவை பொதுத்துறை நிறுவனங்களும், தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்களும் அடங்கும்.
நாட்டில் எரிவாயுக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் தொடர்புடைய அனைவரது முயற்சிகளையும் பாராட்டிய திரு. பிரதான், நாட்டின் மக்கள்தொகையில் 72 சதவீதம் விரைவில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பின் கீழ் வந்து விடுவார்கள் என்றும், இது 53 சதவீத புவிப்பரப்பு அளவுக்குப் பரந்திருக்கும் என்றும் கூறினார். எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். பிஎன்ஜி நிலையங்களின் எண்ணிக்கை 25 லட்சத்திலிருந்து 60 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், 28 ஆயிரம் தொழில்துறை வாயு இணைப்புகள், 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும், சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை 22 லட்சத்திலிருந்து 34 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் வாயு உள்கட்டமைப்பு விரிவாக்கத்தில், பொதுத்துறை நிறுவனங்களுடன், தனியார்துறை நிறுவனங்களும் முழுமனதுடன் பங்கெடுத்துள்ளது மனநிறைவை அளிக்கும் விஷயம் என்று அவர் கூறினார். வருங்காலத்தில் மக்கள் எரிபொருளை வீட்டில் இருந்தபடியே பெற இயலும் என்று திரு. பிரதான் கூறினார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு அமைச்சகச் செயலர் திரு. தருண் குமார், உலகிலேயே எரிசக்தி நுகர்வில் இந்தியா 3-வது நாடாக உள்ளது என்று தெரிவித்தார். அதன் எரிசக்தி உற்பத்தியில் 15 சதவீதம் அளவுக்கு வாயுவைக் கொண்டு வர தீவிரமாகச் செயலாற்றி வருவதாக அவர் கூறினார். நாட்டில் பொருளாதார நடவடிக்கையும், நுகர்வு அளவும் அதிகரிக்கும் போது, எரிசக்தி நுகர்வும் உயரும் என்று அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, எரிசக்தி ஆற்றல் கொண்ட, பொருளாதார ரீதியில் திறன் வாய்ந்த வாயுவை எரிபொருளாக மேம்படுத்த அரசு ஆதரவு அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
(Release ID: 1627712)
Visitor Counter : 290