விவசாயத்துறை அமைச்சகம்

வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் ஆய்வு

Posted On: 28 MAY 2020 8:43PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், இன்று புதுதில்லியில் தமது இணையமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ருபாலா, திரு. கைலாஷ் சவுத்ரி மற்றும் தமது துறைக்கான செயலர் திரு. சஞ்சய் அகர்வால் ஆகியோருடன் வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த விஷயம் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது என்றும், நிலைமையை அவசரமாகச் சமாளித்து வருகிறது என்றும் திரு. தோமர் கூறினார். பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாகவும், இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 15 நாட்களுக்குள் 15 தெளிப்பான்கள் பிரிட்டனிடம் இருந்து வந்துவிடும். மேலும் 45 தெளிப்பான்கள், ஒரு மாதத்திலிருந்து ஒன்றரை மாதத்துக்குள் கொள்முதல் செய்யப்படும். வெட்டுக்கிளிகளைத் தீவிரமாக ஒழிக்கும் நடவடிக்கையாக, உயர்ந்த மரங்கள் மற்றும் அணுகமுடியாத இடங்களில் , ட்ரோன்கள் எனப்படும் பறக்கும் கருவிகள் பூச்சிமருந்தைத் தெளிக்கப் பயன்படுத்தப்படும். மேலும், மருந்துகளைத் தெளிக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் பரவுவதைத் தடுக்க, 11 மண்டல கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், கூடுதல் பணியாளர்களுடன், சிறப்பு பிரிவுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திரு. தோமர் தெரிவித்தார். தேவைப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாரங்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

       ‘’வெட்டுக்கிளிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, தொலைவில் இருந்து இயக்கும் ஆளில்லாத விமான முறையைப் பயன்படுத்த, அரசு நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் விலக்கு’’ அளிக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2020 மே 21-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த உத்தரவுக்கு இணங்க, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிமருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி மூலம் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு ஆற்றலை வலுப்படுத்தும் வகையில், கூடுதலாக 55 வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான விநியோக ஆர்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு அமைப்புகளில், போதிய பூச்சிமருந்து கையிருப்பு ( 53,000 லிட்டர் மாலதியான்) பராமரிக்கப்பட்டு வருகிறது. வேளாண் எந்திரமயமாக்கல் குறித்த துணை இயக்கத்தின் கீழ், தெளிப்பு உபகரணங்கள் ஏற்றப்பட்ட 800 டிராக்டர்களுக்கான உதவி, ராஜஸ்தானுக்கு ரூ. 2.86 கோடி மதிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,  வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை புத்தாக்கத்துக்கான நிதி அணுகுமுறை திட்டத்தின் கீழ், வாகனங்கள், டிராக்டர்களை வாடகைக்கு அமர்த்தவும், பூச்சிமருந்து கொள்முதல் செய்யவும் ராஜஸ்தானுக்கு ரூ.14 கோடிக்கான ஒதுக்கீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை புத்தாக்கத்துக்கான நிதி அணுகுமுறை திட்டத்தின் கீழ், வாகனங்கள், தெளிப்பு உபகரணங்கள், பாதுகாப்பு சீருடைகள் ஆகியவற்றை வாங்கவும்,  ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கம் மற்றும் பயிற்சிக்காகவும் குஜராத்துக்கு ரூ.1.80 கோடி செலவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மாநில வேளாண் துறைகள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை ஆகியவற்றின் நெருங்கிய ஒருங்கிணைப்புட்டன் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

-----



(Release ID: 1627616) Visitor Counter : 245