ரெயில்வே அமைச்சகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த என்ஜினை இந்திய ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

Posted On: 19 MAY 2020 6:50PM by PIB Chennai

பிகாரில் மாதேபுரா மின்சார ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட முதலாவது ரயில் என்ஜினை இந்திய ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது. பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் நேற்று இது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001IYIL.jpg

மாதேபுரா தொழிற்சாலையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரயில் என்ஜின்

 

இந்த என்ஜினுக்கு WAG12 என பெயரிடப்பட்டு 60027 என்ற எண் அளிக்கப் பட்டுள்ளது. தீன்தயாள் உபாத்யாய ரயில்நிலையத்தில் இருந்து 14:08 மணிக்கு இந்த என்ஜின் புறப்பட்டது. கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்தின் மிக நீண்ட ரயிலாக, 118 சரக்குப் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் இருந்து தேஹ்ரி-ஆன்-சோனே, கர்வா சாலை வழியாக பர்வாடிஹ் ரயில் நிலையத்துக்குச் செல்கிறது.

இந்தச் சாதனையின் மூலம், அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட ரயில் என்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வல்லமை கொண்ட 6வது நாடாக பெருமைக்குரிய பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. உலகில் அதிக குதிரைசக்தித் திறன் கொண்ட என்ஜின் அகல ரயில் பாதையில் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மேக் இன் இந்தியா என்ற இந்தியாவிலேயே தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்தபட்சத்தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், ஒருங்கிணைந்த பசுமைவெளி வசதிகளுடன் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய வளாகமாக மாதேபுரா தொழிற்சாலை உள்ளது. 120 ரயில் என்ஜின்கள் தயாரிக்கும் திறன் கொண்ட இந்தத் தொழிற்சாலை 250 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0021UIL.jpg

தொழிற்சாலையின் பிரதான கட்டடம்

IGBT அடிப்படையிலான அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாக, 3 பேஸ் டிரைவ் கொண்டதாக, 9000 கிலோ வாட் (12000 குதிரைசக்தி) திறன் கொண்டதாக, மின்சாரத்தில் இயங்கக் கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் அதிபட்சம் 706kN வரை இழுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். Bo-Bo வடிவமைப்பு கொண்ட 22.5 டன் எடை கொண்ட இந்த என்ஜின் 25 டன் வரை மேம்படுத்தக் கூடியதாக, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கும். பிரத்யேக சரக்கு வழித்தடத்துக்கான நிலக்கரி ரயில்கள் பயணத்தில், புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக இந்த என்ஜின் இருக்கும். ஜி.பி.எஸ். மூலம் இந்த ரயில் என்ஜின் இயக்கத்தைக் கண்காணிக்கும் வசதியும் உள்ளது.

வழக்கமான மின் வழித் தடத்திலும், பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் அதிக உயரத்தில் மின்பாதை உள்ள தடங்களிலும் பயணிக்கக் கூடியதாக இந்த என்ஜின் இருக்கும்.

மாதேபுரா மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு தனியார் நிறுவனம் (MELPL) அடுத்த 11 ஆண்டுகளில் 12000 குதிரைத்திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் 800 என்ஜின்களைத் தயாரிக்கும். உலகில் அதிக சக்திமிக்க மின்சார ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையாக இருப்பதுடன், சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதாகவும் இருக்கும். பாதுகாப்பான மற்றும் அதிக எடைகளைக் கொண்ட சரக்கு ரயில்களை இயக்க உதவிகரமாக இருக்கும். இதனால் சரக்கு ரயில் போக்குவரத்து நெரிசல் குறையும்.


(Release ID: 1625192) Visitor Counter : 596