வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ரெராவின் சிறப்பான அமல்படுத்துதல் விற்போர் மற்றும் வாங்குவோர் இடையே நம்பிக்கையை மீட்டெடுக்கும்: ஹர்தீப் எஸ் புரி.

Posted On: 16 MAY 2020 4:37PM by PIB Chennai

விற்போர் மற்றும் வாங்குவோர் இடையே நம்பிக்கையை மீட்டெடுக்க உதவுவது ரியல் எஸ்டெட் ஒழுங்குமுறை சட்டத்தின் (RERA) முதன்மை நோக்கங்களில் ஒன்று என்றும், ரெராவின் உண்மையான மற்றும் சிறப்பான அமல்படுத்துதலின் மூலம் மட்டுமே அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு. ஹர்தீப் எஸ் புரி கூறினார். விற்காமல் இருக்கும் சொத்துக்களால் ஏற்படும் சுமையைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், எஞ்சியிருக்கும் திட்டங்களை முடிக்கத் தேவைப்படும் நிதி வசதியையும் உருவாக்குபவர்களுக்கு இது அளிக்கும் என்று அவர் கூறினார். "ரெராவின் மூன்றாவது ஆண்டு விழாவை" முன்னிட்டு ரியல் எஸ்டேட் துறையின் பங்குதாரர்களோடு இணையக் கருத்தரங்கு ஒன்றில் இன்று பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

 

ரியல் எஸ்டேட் துறை இயங்கி வந்த பின்னணியைப் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், ரெராவுக்கு முந்தைய காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை 2016 வரை பெரிதும் ஒழுங்குப்படுத்தப்படாமல் இருந்தது என்றும், இது பல்வேறு நியாயமற்ற செயல்களிலும் முரண்பாடுகளிலும் முடிந்ததால் வீடு வாங்குபவர்களை மிகவும் பாதித்ததென்றும் கூறினார். இதனால், வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்யும் வகையில் இந்தத் துறையை ஒழுங்குப்படுத்துவதற்கான தேவை நீண்ட காலமாக உணரப்பட்டது. "ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) சட்டம், 2016 (ரெரா) இயற்றப்பட்டதன் மூலம், நாட்டுக்கு அதன் முதல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் கிடைத்தது. இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தை எழுதிய ரெரா, இந்தத் துறையை சீர்திருத்துவதற்கும், அதிக வெளிப்படைத்தன்மை, மக்கள் சார்ந்த செயல்பாடுகள், பொறுப்புக்கூறல் மற்றும் நிதி ஒழுக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கும் ஒரு படியாக அமைந்தது. ரியல் எஸ்டேட் துறையை திறமையான மற்றும் வெளிப்படையான முறையில் ஊக்குவிப்பதும், வீடு வாங்குவோரின் நலனைக் காப்பதும் தான் இந்த மாற்றியமைக்கும் சட்டத்தின் தலையாய நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.

 

ரெராவின் வெற்றிகரமான அமல்படுத்துதலைப் பற்றிய தகவல்களை அளித்த அமைச்சர், ரெராவின் கீழ் 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் விதிகளை அறிவித்துள்ளதாகக் கூறினார். 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்துள்ள நிலையில், 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அமைத்துள்ளன. "நாடு முழுவதும் 52,000க்கும் அதிகமான ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் 40,517 ரியல் எஸ்டேட் முகவர்கள் ரெராவின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். 46,000க்கும் அதிகமான புகார்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அதிகாரிகளால் நாடு முழுவதும் முடித்து வைக்கப்பட்டுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

 

தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களையும், ரியல் எஸ்டேட் துறையின் மீது அதன் பாதிப்பையும் பற்றி பேசிய அமைச்சர், கொவிட்-19 ரியல் எஸ்டேட் துறையைப் பலவீனப்படுத்தும் வகையில் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக திட்டங்கள் தாமதமடைந்துள்ளதாகவும் கூறினார்.

 

***



(Release ID: 1624735) Visitor Counter : 155