மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய - மாநில அரசுகள் நடத்தி வரும் ஆசிரியர் கல்விக்கான படிப்புகளுக்கு முன் தேதியிட்டு அனுமதி : மனித வள அமைச்சர் அறிவிப்பு

Posted On: 15 MAY 2020 6:10PM by PIB Chennai

ஒரு சில மத்திய, மாநில அரசு நிறுவனங்களல் தற்போது நடத்தப்பட்டு வரும் குறிப்பிட்ட சில ஆசிரியர் கல்வித் திட்டங்களை முன் தேதியிட்டு ஒழுங்கமைக்கும் வகையில் 2020 மே 12 அன்று மத்திய மனிதவளத் துறை இரண்டு அரசிதழ் அறிவிக்கைகளை வெளியுட்டுள்ளது என மத்திய மனித வளத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று அறிவித்தார். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிடமிருந்து முறையான அங்கீகாரம் எதையும் பெறாமல் இந்தக் கல்வித் திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்படவுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆசிரியர் சேவைக்கு முந்தைய கல்விக்கென ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அங்கீகரித்துள்ள எந்தவொரு பாடத்திட்டத்தையும் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தனது அங்கீகாரத்தை முறையாகவும் சட்டபூர்வமாகவும் வழங்கி வருகிறது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற எந்தவொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற பிறகே எவர் ஒருவரும் இந்தியாவில் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு சட்டபூர்வமாக தகுதியானவர் ஆகிறார்.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலால் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர் கல்விப் படிப்புகளில் ஒரு சில மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் கவனக் குறைவாக மாணவர்களை சேர்த்து நடத்தி வருவது குறித்து மத்திய மனிதவளத் துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக இந்தப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் பெறவிருக்கும் கல்வித் தகுதியானது இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களாக வேலை பெறுவதற்கான தகுதியற்ற ஒன்றாக மாற்றியுள்ளது.

இந்தப் படிப்புகளுக்கு முன் தேதியிட்டு அங்கீகாரம் அளிப்பதற்கென 1993ஆம் ஆண்டின் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சட்டத்தில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வர மத்திய மனிதவளத் துறை முன்முயற்சி எடுத்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டப் பிறகு இந்தச் சட்டத்திருத்தம் 2019 ஜனவரி 11 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது.

குறிப்பாக இந்தச் சட்டத் திருத்தமானது 2017-18 கல்வியாண்டு வரையில்தான் முன் தேதியிட்ட அங்கீகாரத்தை வழங்குகிறது. இதன் மூலம் அதற்கு முந்தைய காலத்தில் மாணவர்கள் பெற்ற கல்வித் தகுதிகளை  மட்டுமே அது முறைப்படுத்துகிறது. இந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் அங்கீகரிக்கப்படாத படிப்புகளை நடத்தவும், அதன்பிறகு இதே போன்று முன் தேதியிட்டு அங்கீகாரம் பெற அரசை அணுகுவதற்கான வழிவகை எதுவும் செய்ய இந்த சட்டத் திருத்தத்தில் திட்டமிடப்படவில்லை.

இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் 23 கல்வி நிறுவனங்கள் பயன்பெறும் என்பதோடு, சுமார் 13,000 மாணவர்களும், ஆசிரியர் பணியின் ஒரு பகுதியாக இந்தப் படிப்பை மேற்கொண்ட சுமார் 17,000 ஆசிரியர்களும் பயனடைவர்.

அரசின் இந்த அறிவிக்கையின் விளைவாக, இதனால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள், ஆசிரியர் பணியின் ஒரு பகுதியாக இந்தப் படிப்பை மேற்கொண்டு பெற்ற கல்வித் தகுதி இப்போது சட்டபூர்வமாகவே சரிசெய்யப்பட்டுள்ளது.


(Release ID: 1624397) Visitor Counter : 240