ஜல்சக்தி அமைச்சகம்

டிசம்பர் 2022க்குள் ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும்

Posted On: 13 MAY 2020 1:14PM by PIB Chennai

ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ் டிசம்பர் 2022க்குள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிராமப்புற வீடுகள் அனைத்திற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும்.  நடப்பு ஆண்டில், கந்தர்பால், ஸ்ரீநகர் மற்றும் ரைசி ஆகிய மூன்று மாவட்டங்களின் 5,000 கிராமங்களிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்புத் தருவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

 

மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையினரிடம் நேற்று மாநில அதிகாரிகள் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புத் தருகின்ற இலக்கை அடைவதற்கான செயல்திட்டத்தை ஒப்படைத்தனர்.  அப்போது அவர்கள் யூனியன் பிரதேசத்தில் உள்ள 18.17 இலட்சம் வீடுகளில் 5.75 இலட்சம் வீடுகளுக்கு ஏற்கனவே செயல்பாட்டு அளவில் குடும்பக் குழாய் (FHTCs)  குடிநீர் இணைப்புத் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.  மீதி உள்ள வீடுகளில் 1.76 இலட்சம் வீடுகளுக்கு 2020-21இல் குடிநீர் இணைப்புத் தருவதற்கு ஜம்மு & காஷ்மீர் திட்டமிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பாக 680 கோடி ரூபாய் யூனியன் பிரதேசத்திற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை இணைப்பு என்ற அடிப்படையிலும் நிதி செயல்திறனின் அடிப்படையிலும் யூனியன் பிரதேசம் அதிகப்படியான நிதி ஒதுக்கீட்டுக்குத் தகுதி பெறும்.  தேசிய இலக்கான 2024-25க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்பு என்ற காலக்கெடுவுக்கு முன்பாகவே அதாவது டிசம்பர் 2022க்குள் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத இணைப்பைத் தர வேண்டும் என்று யூனியன் பிரதேச நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்தால், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புக் கொடுத்தல் என்ற இலட்சிய இலக்கை வெற்றிகரமாக செய்து முடித்த மாநிலம் என ஜம்மு & காஷ்மீர் முன்னுதாரணமாக விளங்கும்.

கோவிட்-19 பெருந்தொற்றின் சோதனையான காலகட்டத்தில், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி தருதல் என்ற முயற்சியானது, அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கையை சிரமம் இல்லாமல் ஆக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் வேலைச்சுமையைக் குறைக்கும், அவர்கள் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ உதவும்.


(Release ID: 1623580) Visitor Counter : 201