அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 தொற்றுக்கு பிந்தைய உற்பத்தி நிறுவனங்களின் மாற்றம், தற்போதைய சவாலில் இருந்து விடுபட தொழில்துறைக்கு நெருக்கமான முறையில் ஆராய்ச்சி அவசியம்

Posted On: 12 MAY 2020 6:59PM by PIB Chennai

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மாற்றங்கள் வாயிலாக பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்த டிஜிடல் மாநாடு நாள் முழுவதும் நடைபெற்றது. தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில், கோவிட்-19 தொற்றுக்கு பிந்தைய உற்பத்தி நிறுவனங்களின் மாற்றம், கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய சவாலில் இருந்து விடுபட தொழில்துறைக்கு நெருக்கமான முறையில் ஆராய்ச்சி கொண்டுவரப்பட வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மருந்துகள் மற்றும் தொற்று நோய்களை எதிர்கொள்ளும் சிறந்த முன்னேற்பாடுகளுக்கான மருத்துவ தொழில்நுட்பம்குறித்த அமர்வில் பங்கேற்ற வல்லுநர்கள், இந்தப் பெருந்தொற்று , ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், இதனை வலுப்படுத்துவதற்கு தொற்றால் ஏற்பட்டுள்ள நிலையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தனர்.

‘’பிற நாடுகளுடன் ஒத்துழைக்க இந்தியா விரும்புகிறது. தொற்றை எதிர்த்து முறியடிக்க சர்வதேச ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பு தலைவர் டாக்டர் எஸ்.கே. வர்ஷ்னி தெரிவித்தார்.

நாள் முழுவதும் நடைபெற்ற இந்த மாநாடு, விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், கல்வித்துறை நிபுணர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோரை ஒரே தளத்தில் இணைத்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்தது.



(Release ID: 1623523) Visitor Counter : 175