அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல்- தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதாரத்திற்கு உயிரூட்ட இந்தியா தயாராகிறது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்.

Posted On: 11 MAY 2020 5:30PM by PIB Chennai

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் வலுவாகவும், உறுதியாகவும் முன்னேறி வருகிறது என அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவிசார் அறிவியல்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று குறிப்பிட்டார். தேசிய தொழில்நுட்ப தினத்தைக் கொண்டாடும் வகையில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மொழிபெயர்ப்புகளின் மூலம் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவது என்ற தலைப்பில் நடைபெற்ற டிஜிட்டல் முறையிலான மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றினார். அறிவியல்-தொழில்நுட்பத் துறை மற்றும் இந்தியத் தொழில் மகா சம்மேளனம் ஆகியவை கூட்டாக உருவாக்கியுள்ள சட்டபூர்வமான அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் போன்ற சீரழிவிற்கு எதிராக அறிவியல்-தொழில்நுட்ப அமைச்சகத்தின் நடவடிக்கைகளைப் பாராட்டிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவியல் தொழில்நுட்ப இயற்கையான அமைப்பு முழுவதன் ஒத்துழைப்பு உணர்வை பிரதிபலிப்பதாகவே இத்துறையில் செயல்பாடு அமைந்திருந்தது என்பதையும் வலியுறுத்தினார். “இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளைக் கண்டறிவதில் இந்திய அரசு, அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், புதிய தொழில் தொடங்குவோர், தொழில்துறையினர் ஆகியோர் இடையறாது பாடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரசுக்கு எதிரான உடனடியான, நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வுகளைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நமது விஞ்ஞானிகள், நமது தொழில்முனைவோர், நமது நிறுவனங்கள்  ஆகியவற்றை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள், தொழில்ரீதியான கூட்டுகள், மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகள் ஆகியவை துரிதமாக வளர்த்தெடுக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“மிகக் குறைவான கால அவகாசத்திற்குள்ளேயே, புதிய சோதனைக் கருவிகள், பாதுகாப்புக் கவசங்கள், மூச்சு மேலாண்மைக் கருவிகள் போன்றவற்றை வளர்த்தெடுப்பதில் ஏராளமான ஆய்வாளர்களை அணி திரட்டவும் நமது நாட்டினால் முடிந்துள்ளது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொடர்பான தொழில்நுட்பத் திறன்களைக் கண்டறிவதற்கென அரசினால் அமைக்கப்பட்டுள்ள “கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான பணிக்குழு குறித்தும் பார்வையாளர்களிடையே அமைச்சர் விவரித்தார். “இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற திட்டத்தை நமது அரசு மிகத் தீவிரமாக ஆதரித்து வந்துள்ளது. இந்த முன்முயற்சி கொரோனா வைரசைக் கண்டறிவதற்கான சோதனைகள், முகமூடிகள், சுத்திகரிப்பான்கள், தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள், மூச்சு மேலாண்மைக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய நமது அறிவியல் நிறுவனங்கள், புதிய தொழில் முயற்சிகள் ஆகியவற்றை கவர்ந்திழுத்துள்ளன” என்றும் அவர் மேலும் கூறினார்.  

இந்த ஆண்டிற்கான தேசிய தொழில்நுட்ப தினத்தின் முழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், “மிக விரிவான வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான தாக்கத்தை நாம் மாற்றி அமைக்கவும், சுயச்சார்பு என்பதை புதியதொரு தாரக மந்திரமாகக் கொண்டு வலுவான வகையில் நாம் மீண்டு வரவும் வேண்டியுள்ளது. எனவே தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் புதிய வாய்ப்புகளை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சுட்டிக் காட்டினார்.


(Release ID: 1623050) Visitor Counter : 251