குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதி கிராமத் தொழில் ஆணையத்தில் மட்பாண்டத் தொழில் முனைவோர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க புதுமையான முறைகளை பயன்படுத்துகின்றனர்.
Posted On:
11 MAY 2020 5:23PM by PIB Chennai
கொவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் மிகச்சிறிய முயற்சி கூட நம்பிக்கையை எழுப்புகின்ற நேரத்தில், ஒரு ராஜஸ்தான் கிராமத்தில் ஏராளமான காதி கிராம மட்பாண்டத் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் தனித்துவமான பிரச்சாரத்துடன் நாட்டின் கவனத்தை ஈர்க்கிறார்கள். ராஜஸ்தானில் உள்ள பாரன் மாவட்டத்தின் கிஷன்கஞ்ச் கிராமத்தில் இந்த மட்பாண்டத் தொழிலாளிகளால் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு மண் பானையும், குறிப்பாக குடம், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைப் பற்றிய செய்தியைக் கொண்டுள்ளது. இவர்களின் விழிப்புணர்வுத் தகவல் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை உறுதி செய்வதோடு, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து தண்ணீர் குடிக்கும் போது இந்த விழிப்புணர்வுத் தகவலைக் காணலாம்.
மட்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள், தங்கள் குடங்களில் "முகமூடியைப் பயன்படுத்துங்கள்", "வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்", "தடுப்பு முறையே சிகிச்சை" மற்றும் "கொரோனாவிலிருந்து ஜாக்கிரதை" போன்ற செய்திகளை அச்சிட்டுள்ளனர். இந்த குடங்களின் விற்பனையும் வெப்பநிலையைப் போலவே அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் மூலம் வீட்டின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு நாளைக்கு 4 - 5 முறையாவது இந்தத் தகவல்களைப் படிப்பது உறுதியாகிறது,
காதி கிராமத் தொழில் ஆணையத் தலைவர் திரு. வினாய் குமார் சக்சேனா மட்பாண்டத் தொழிலாளர்களின் இந்த முயற்சிகளைப் பெரிதும் பாராட்டினார், இது போன்ற தனித்துவமான வழி மூலம் மக்களுடன் தொடர்புகொள்வது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
**************
(Release ID: 1623047)
Visitor Counter : 196