புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

நாள் முழுவதும் விநியோகிக்கக் கூடிய 400 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான தலைகீழ் மின் ஏலத்தை நடத்தியது மத்திய பொதுத் துறை நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் கழகம்.

Posted On: 09 MAY 2020 3:24PM by PIB Chennai

நாள் முழுவதும் விநியோகிக்கக் கூடிய 400 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான தலைகீழ் மின் ஏலத்தை, ஆச்சரியமூட்டும் முதல் வருடக் கட்டணமான ரூ. 2.90/kWhக்கு (கிலோ வாட் மணி) நிறைவு செய்ததன் மூலம், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இன்று வரலாற்றில் இடம் பிடித்தது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  மத்திய பொதுத் துறை நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் கழகம் (SECI) இந்த ஏலத்தை நடத்தியது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு நடந்த, குறைவான கட்டணம் 69 பைசா வரை இறங்குவதைக் கண்ட, போட்டி மிகுந்த ஏலத்தின் முடிவில் 400 மெகா வாட் திறன் திருவாளர்கள் ரிநியூ சோலார் பவர் பிரைவேட் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது.

 

இந்த முயற்சிக்காக இந்திய சூரிய ஆற்றல் கழகத்துக்கு பாராட்டு தெரிவித்த, மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை (தனிப் பொறுப்பு), திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைதல் துறை இணை அமைச்சர், திரு ஆர். கே. சிங், "இந்திய சூரிய ஆற்றல் கழகம் நடத்திய நாள் முழுவதும் விநியோகிக்கக் கூடிய 400 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான தலைகீழ் மின் ஏலம் வரலாற்று சிறப்பு மிக்க முதல் வருடக் கட்டணமான ரூ. 2.90/kWhக்கு நிறைவடைந்ததன் மூலம் இந்திய  புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வரலாற்றில் தங்கமான அத்தியாயம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. உறுதியான, அட்டவணைப்படுத்தக் கூடிய மற்றும் வாங்கக்கூடிய விலையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகத்தை நோக்கி புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அடியெடுத்து வைக்கிறது," என்று சுட்டி ஒன்றில் நேற்று மாலை அமைச்சர் கூறினார்.

 

காற்று மற்றும் சூரிய ஒளி மின்னழுத்தத்துடன் இணைந்த சேமிப்பு போன்ற 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சார உற்பத்தியில் இருந்து, நாள் முழுவதும் விநியோகத்தை இந்த ஏலம் அளிப்பது இந்தக் கட்டணத்தை வரலாற்று சிறப்பு மிக்கதாக ஆக்குகிறது.(Release ID: 1622555) Visitor Counter : 22