குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கோவிட் நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும்: திரு நிதின் கட்கரி

Posted On: 03 MAY 2020 4:24PM by PIB Chennai

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று தலித் இந்திய தொழில் வர்த்தக சபையின் பிரதிநிதிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடினார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத் தொழில்முனைவோருக்குச் சொந்தமான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சவால்கள் பற்றிக் குறிப்பிட்ட வர்த்தக சபையின் பிரதிநிதிகள், இந்தத் துறையைப் பாதுகாப்பதற்கு அரசு அளிக்க வேண்டிய உதவிகள் பற்றி ஆலோசனைகளும் வழங்கினர்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அனைத்துத் தொழில் நிறுவனங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என்று நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார். தனிப்பட்ட முழு உடல் பாதுகாப்புக் கவச உடை (PPE), முகக் கவச உறைகள், கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது குறித்து வலியுறுத்திய அவர், தொழில் வணிகச் செயல்பாடுகளின் போது தனி நபர்  இடைவெளி பராமரித்தலைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதே சமயத்தில், இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு மாற்றான பொருள்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதுமைச் சிந்தனை, தொழில்முனைவு சிந்தனை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்துவதுடன், சிந்தனைகளுக்குச் செயலாக்கம் கொடுத்து புதிய கண்டுபிடிப்புகளாக உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். சர்வதேசச் சந்தையில் போட்டியிடும் அளவுக்கு வாய்ப்புகளைப் பெறுவதற்கு, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் குறைந்த செலவில் பொருள்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

சீனாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு ஜப்பான் அரசு சிறப்புத் திட்டம் அறிவித்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த வாய்ப்புகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பசுமை விரைவு நெடுஞ்சாலை திட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். தொழிற்சாலைகள் தொகுப்புப் பகுதிகளில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சேமிப்புக் கிடங்குகளின் பூங்காக்கள் உள்ள பகுதிகளில் எதிர்கால முதலீடுகளை செய்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மெட்ரோ நகரங்கள் அல்லாத பகுதிகளில் தொழிற்சாலைத் தொகுப்புகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதற்கான அவசியம் உள்ளது என்றும், இதில் தொழிற்சாலைகளின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதிநிதிகள் அளித்த பரிந்துரைகளில், கடன் திருப்பிச் செலுத்தும் கெடுவை நீட்டித்தல், சரக்கு மற்றும் சேவை வரியில் கூடுதல் விலக்கு, செயல்பாட்டு மூலதனக் கடன் வரம்பை அதிகரித்தல், எளிதில் கடன் கிடைக்கும் வசதி, சிறப்புக் கடன் தொடர்பு மூலதன மானியத் திட்டத்தில் சேவைத் துறையைச் சேர்த்தல், தொழிற்சாலைகளைப் பரவலாக்குதல் உள்ளிட்ட யோசனைகளும் இடம் பெற்றிருந்தன.

 



(Release ID: 1620695) Visitor Counter : 147