அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்வி நிறுவனத்தின் சர்வதேச கவுரவ உறுப்பினராக ஜேஎன்சிஏஎஸ்ஆர் பேராசிரியர் தேர்வு

Posted On: 01 MAY 2020 6:03PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் கோட்பாட்டு பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஷோபனா நரசிம்மன், கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்வி நிறுவனத்தின் சர்வதேச கவுரவ உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

அறிவியல், கலை, மனிதநேயம், பொது வாழ்வு ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கும் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை கலை, அறிவியலுக்கான அமெரிக்க அகாடமி கவுரவித்து வருகிறது. இதற்கு முன்னதாக, சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் சர்வதேச கவுரவ உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு அதிநவீன ஆராய்ச்சி மையத்தில் உள்ள நானோ அறிவியல் மதிப்பீட்டுக் குழுவுக்கு பேராசிரியர் நரசிம்மன் தலைமை வகிக்கிறார். நானோ பொருட்களின் சீரான வடிவமைப்பு குறித்து முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். களஅளவை குறைப்பது மற்றும் அளவை குறைப்பதன் மூலம், பொருட்களின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வுகள், பல்வேறு செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாக உள்ளன. அதாவது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிசக்தி அப்ளிகேஷன்களுக்கு நானோ கேட்டலிஸ்ட் பயன்படுகிறது. அதேபோல, தகவல்களை சேமித்து வைப்பதற்கு காந்தத் தன்மையுள்ள பொருட்கள் (magnetic materials) பயன்படுகிறது.

ஆக்ஸைடு அடி மூலக்கூறுகளில் உள்ள சிறு தங்க பொருட்களை, எலெக்ட்ரான் டோனர் அல்லது அக்சப்டர்கள் மூலமாக மாற்றியமைக்கும்போது, அதன் உருவம் மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்க முடியும் என்று அவரது குழுவினர் கணித்துள்ளனர்.

[மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் ஷோபனா நரசிம்மனை தொடர்புகொள்ள (shobhana@jncasr.ac.in, 98806 41962)]

****



(Release ID: 1620429) Visitor Counter : 107