பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீர், லடாக், வடகிழக்குப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த நிலைமைகளை காணொலி காட்சி வழியாக முன்னாள் ராணுவ, விமானப்படைத் தலைவர்களுடன் இன்று விவாதித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 29 APR 2020 7:11PM by PIB Chennai

வடகிழக்குப் பகுதி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான விவரங்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று முன்னாள் ராணுவ, விமானப்படைப் பிரிவுத் தலைவர்களிடமிருந்து கேட்டறிந்தார்.

முன்னாள் ராணுவ, விமானப் படைப்பிரிவுகளின் பெரும்பாலான தலைவர்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளைப் பற்றி நேரடியான அனுபவம் பெற்றவர்களாக இருப்பதோடு, இந்தப் பகுதிகளின் பிரத்தியேகமான நிலைமையையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி பணி ஓய்வுக்குப் பிறகு அவர்கள் பொது சமூகத்தில் முக்கியமான நபர்களாக இருப்பதோடு, மக்களிடையே கருத்துக்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர்களாகவும் விளங்குகின்றனர். இந்நிலையில் அவர்கள் தரும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நமது முயற்சிகளை மேம்படுத்துவதற்கு மதிப்புமிக்கவையாக இருப்பதோடு, தங்கள் சொந்தக் கண்ணோட்டத்தில் இருந்து அவர்கள் காணும் சில அம்சங்களை நமக்கு உணர்த்துபவையாகவும் அமைகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடகிழக்குப் பகுதியில் உள்ள மொத்தம் எட்டு மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட்டுள்ளன என்பதோடு மீதமுள்ள மூன்று மாநிலங்களிலும் கூட கடந்த சில நாட்களில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக எவரும் ஆளாகவில்லை என்ற தகவலையும் டாக்டர் ஜிதேந்திர சிங் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பொது முடக்கத்தைப் பொறுத்தவரையில் அதைத் தளர்த்துவதென்பது படிப்படியான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. அதைப் போன்றே வடகிழக்குப் பகுதியைப் பொறுத்தவரையில் அருகாமை நாடுகளான வங்கதேசம் போன்ற மற்ற நாடுகளுடனான எல்லைப் பகுதிகளை மூடி வைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதே இந்தப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுவான அறிவுரை ஆகும்.

வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு பகுதிகளிலுமே பொதுமக்களின் அணுகுமுறை என்பது சாதகமான ஒன்றாகவே உள்ளது. அதைப் போன்றே இணையவழி வர்த்தகம், இணையவழி வகுப்புகள் ஆகியவை குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.



(Release ID: 1619904) Visitor Counter : 170