விவசாயத்துறை அமைச்சகம்

இயங்கிவரும் வேளாண் சந்தைகளின் எண்ணிக்கை, ஊரடங்கு தொடக்கத்திலிருந்து இரட்டிப்பாகியிருக்கிறது.

Posted On: 23 APR 2020 7:58PM by PIB Chennai

பொது ஊரடங்கு காலத்தில், களஅளவில், விவசாயிகள் மற்றும் வேளாண் பணிகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசின் வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கைகளின் தற்போதைய நிலவரம் வருமாறு;

  1. ஊரடங்கு தொடங்கிய போது 26.3.2020 அன்று, நாட்டில் இருந்த 2587 முதன்மை மற்றும் முக்கிய வேளாண் சந்தைகளில் 1091 சந்தைகள் இயங்கி வந்தன. 21.4.2020 நிலவரப்படி இயங்கும் சந்தைகளின் எண்ணிக்கை 2069 ஆக உள்ளது.
  2. 16.3.2020 உடன் ஒப்பிடுகையில், மண்டிகளுக்கு வெங்காயம், உருளைக் கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளின் வரத்து முறையே 622 சதவீதமும், 187 சதவீதமும், 210 சதவீதமும் அதிகரித்துள்ளது.
  3. 2020 ரபி பருவகாலத்தில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் தற்போது 20 மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. ரூ.1447.55 கோடி மதிப்பிலான , 1,73,064 மெட்ரிக் டன் பருப்பு வகைகள், 1,35,993 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்கள் , தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED),  மற்றும் இந்திய உணவுக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டன. இதன் மூலம் 1,83,989 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  4. வரும் பருவமழைக் காலத்தைப் பயன்படுத்தும் வகையில், தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ், நடவடிக்கைகளை மாநிலங்கள் தொடங்கியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகார் மாவட்டத்தில், பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், உணவு உள்ளிட்ட வசதிகளை அளித்து, மூங்கில் நாற்று விடும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. குஜராத்தின், சபர்காந்தா, வன்சாடா மாவட்டங்களில் நாற்று விடும் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தின், காம்ரூப் மாவட்டம், டிமோரியா வட்டாரத்தில் 585 ஹெக்டேரில், 520 விவசாயிகளைக் கொண்டு நாற்றுப் பணிகளை விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள் தொடங்கியுள்ளன.
  5. 24.3.2020 முதல் தற்போது வரை ஊரடங்கு காலத்தில், பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ், 8.938 கோடி விவசாயக் குடும்பங்கள் பயனடையும் வகையில், ரூ.17,876.7 கோடி வழங்கப்பட்டுள்ளது.

(Release ID: 1617750) Visitor Counter : 251