பாதுகாப்பு அமைச்சகம்

அருணாச்சலப் பிரதேசத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையை மிகக் குறுகிய காலத்திற்குள் உருவாக்கியுள்ளது எல்லைப்பகுதி சாலைகளுக்கான அமைப்பு

Posted On: 20 APR 2020 6:48PM by PIB Chennai

நாடு தழுவிய அளவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்துள்ள போதிலும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொடர்பு வசதியை இணைக்கும் வகையில் சுபன்ஸ்ரீ ஆற்றின் மீது டாபோரிஜோ பாலத்தை எல்லைப்பகுதி சாலைகளுக்கான அமைப்பு உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த கட்டுமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எல்லைப்புறச் சாலைகளுக்கான 23வது பணிக்குழு கடந்த  மார்ச் 17ம் தேதி அன்று இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. 27 நாட்களுக்குப் பிறகு இந்தப் பாலம் முழுமைபெற்றது. தாங்கு தூண்களும் பாதுகாப்பாக நிறுவப்பட்டன. 24 டன் எடையை தாங்கும் பாலம் என்பதில் இருந்து 40 டன் எடையைத் தாங்கும் பாலமாக இது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத் தேவைகளுக்கு மட்டுமின்றி சுபன்ஸ்ரீ மேற்கு மாவட்டத்தின் உள்கட்டமைப்புக்கான எதிர்காலத் தேவைகளையும் நிறைவு செய்ய  வழியேற்பட்டுள்ளது.

காணொலி காட்சி நிகழ்ச்சியின் மூலம் அருணாச்சல் பிரதேச மாநில முதல்வர் திரு. பெமா காண்டு இன்று பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தின் மீதான போக்குவரத்து இன்று முதல் தொடங்கியது.

பாதுகாப்பான முறையிலும் விரைவாகவும் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. எல்லைப்புற சாலை அமைப்பு, பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றுக்கு இடையிலான தங்குதடையற்ற ஒத்துழைப்பிற்கு இது சான்றாக உள்ளது..



(Release ID: 1616776) Visitor Counter : 193