வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
கோவிட்-19: அதி நவீன நகரங்களில் உள்ள பொது இடங்களில் கிருமி நீக்கம்
Posted On:
09 APR 2020 5:00PM by PIB Chennai
கோவிட்-19 உலக பெரும் தொற்றாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, நகரங்களை, குறிப்பாக வைரஸ் பரவல் ஆபத்து அதிகம் உள்ள இடங்களாகக் கருதப்படும் பொது இடங்களை தூய்மைப்படுத்த இந்திய நகரங்கள் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தேசிய பொது முடக்கம் மார்ச் 25ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டதில் இருந்து, பேருந்து / ரயில் நிலையங்கள், தெருக்கள், கடைத்தெருக்கள், மருத்துவமனை வளாகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்ய பல்வேறு அணுகுமுறைகளை நகரங்கள் கையாண்டு வருகின்றன.
கிருமி நாசினிகள் கொண்டு அனைத்துத் தெருக்களையும் சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகங்கள் தீயணைப்பு துறையுடன் இணைந்து, தீயணைப்பு கருவிகள், தண்ணீர் பாய்ச்சும் பம்புகள் ஆகியவற்றை பயன்படுத்தின.
சோடியம் ஹைப்போ குளோரைட் கொண்டு பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்ய நகரங்கள் புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. உதாரணமாக, திருப்பூர் நகரம் சமீபத்தில் கிருமி-நீக்க சுரங்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதை தற்போது பல்வேறு நகரங்கள் தங்கள் விவசாய / காய்கறி சந்தைகளில் பயன்படுத்துகின்றன. இதனடிப்படையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள், இதுபோன்ற கிருமி நீக்க அறைகளை பயன்படுத்தி வருகின்றன.
மனிதர்கள் அணுகுவதற்குக் கடினமாக உள்ள இடங்களில், ஆளில்லா குட்டி விமானம் போன்ற தொழில்நுட்ப தீர்வுகளை பயன்படுத்தி பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்ய, அதி நவீன நகரங்களான சென்னை, பெங்களூரு, ராய்ப்பூர் மற்றும் குவாஹத்தி தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளன.
பொலிவுறு நகரங்கள் அமல்படுத்தி உள்ள முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:
சென்னை: கிருமி நீக்க நடவடிக்கைகளில் ஆளில்லாத குட்டி விமானங்களைப் பயன்படுத்துதல்
மதுரை: கை கழுவுவதற்காக 30 பொது இடங்களில் கை கழுவுவதற்கு குழாய் பொருத்தப்பட்ட கிண்ணம். மதுரை மாநகராட்சியால் கிருமிநாசினி தயாரிக்கப்பட்டு, அரசு அலுவலகங்களில் நுழையும் போது பொது மக்களுக்கும் அலுவலர்களுக்கும் கையில் தடவிக்கொள்ள கொடுக்கப்படுகிறது.
மதுரை: ஏழு ஜெட் ராடர் கருவிகளைக் கொண்டு ஐந்து சதவீத லைசால் கலக்கப்பட்ட திரவம் தினமும் இரண்டு முறை பொது இடங்கள், கடைத் தெருக்கள், பள்ளிகள் சாலைகளில் கால்வாய்களைச் சுத்தப்படுத்தத் தெளிக்கப்படுகிறது. மேலும், இதே போன்ற திரவத்தை மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள தெருக்களில் தெளிக்க 100 கை தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தஞ்சாவூர்: பெரிய தெருக்களில் சோடியம் ஹைப்போ குளோரைடு தெளிக்க கால்வாய்களைச் சுத்தப்படுத்தும் ஜெட் ராடர் கருவி கிருமிநாசினி வண்டியாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், தண்ணீர் பாய்ச்சும் பம்புகள் சிறு தெருக்களில் பயன்படுத்தப்படுகின்றன.
தஞ்சாவூர்: தீயணைப்புத்துறையுடன் நெருங்கி பணியாற்றி வருகிறது, கிருமி நீக்கப் பணிகளுக்காக அதன் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி வருகிறது.
வேலூர்: நகரத்துக்குள் நுழையும் அனைத்து இடங்களும் கட்டுப்படுத்தப்பட்டு, தனிப்பட்ட சோதனை மற்றும் தூய்மைப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர்: முக்கிய இடங்களில் போதுமான சமூக இடைவெளியோடு கைகழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர்: கோவிட் 19 தொற்றை எதிர்த்துப் போரட பிரத்தியேகமான ஒரு கிருமி-நீக்க சுரங்கம் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பான யங் இந்தியாவின் துணையோடு இந்த சுரங்கத்தை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒன்று இந்த கிருமி-நீக்க சுரங்கம் ஆகும். சந்தையில் நுழையும் மக்கள் தங்கள் கைகளை கழுவிய பின்னர் இந்த சுரங்கத்திற்குள் மூன்றிலிருந்து நான்கு விநாடிகள் வரை நடக்க வைக்கப்படுகின்றனர். மேலே உள்ள தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினிகள் அவர்கள் மீது தெளிக்கப்படுகின்றன. இந்த கிருமி-நீக்க சுரங்கத்தை விட்டு வெளியே வந்த பின்னரே மக்கள் சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
***
(Release ID: 1612680)
Visitor Counter : 394