சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி இந்திய மருத்துவ கழத்துடன் டாக்டர்.ஹர்ஷவர்தன் ஆய்வு

Posted On: 01 APR 2020 7:00PM by PIB Chennai

நாடு முழுவதும்  கோவிட்-19 தொற்று தொடர்பாக மருத்துவப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகள் பற்றி, இந்திய மருத்துவ கழகம் மற்றும் மாநிலக் கிளைகளின் மூத்த உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்துக்கு  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தலைமை வகித்தார்.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழல், பல்வேறு விதிமுறைகள், சிகிச்சை மற்றும் நெறிமுறைகள் பற்றி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தில்லி,  தமிழ்நாடு,  கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேஷ், பஞ்சாப், ராஜஸ்தான், மிஜோரம், மணிப்பூர், அசாம், ஒடிசா, குஜராத், சண்டிகர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், தனிமை வார்டுகள், அதிக அளவிலான பரிசோதனை வசதிகளுக்கான தயார் நிலைகள் பற்றிய தற்போதைய நிலை குறித்து டாக்டர் ஹர்ஷவர்தன் ஆய்வு செய்தார். மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் அளவிலான அரசு எந்திரங்களுக்கு உதவும் வகையில், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மாநிலக் கிளைகளின் உறுப்பினர்கள் பணிக்குழுக்களை அமைத்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  “நாட்டு நலன் கருதி, பொது முடக்கச் சூழலை எவ்வாறு திறமையுடனும், பொறுப்புடனும் சமாளிப்பது என்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பணியைப் பாராட்டிய டாக்டர் ஹர்ஷவர்தன், கோவிட்-19 பரவாமல் முறியடிக்க, அரசுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பாடுபட வேண்டிய தருணம் இது என்று கூறினார்.

‘’கோவிட்-19 பரவலைத் தடுக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம், பரவலைத்தடுத்து நிறுத்தத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம், தொடர்ந்து செய்ல்படுவோம்‘’ என்று டாக்டர் ஹர்ஷவர்தன் உறுதிபடத் தெரிவித்தார்.

கோவிட்-19 வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது  முடக்கத்தை மக்கள் மதித்து நடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தனிமைப் படுத்துதல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதுடன், தனிப்பட்ட நபர்களின் ஆரோக்கியம் மற்றும் சுவாச முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  அறிவுரைப்படி, மக்கள் வீடுகளில் தங்கியிருந்து, தங்கள் பணிகளைச் செய்யலாம் என்று அவர் கூறினார்.    



(Release ID: 1610272) Visitor Counter : 132