திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

அனைத்து தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களையும் கொவிட்-19க்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்ற தயார்படுத்துகிறது, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம்

திறன் முன்னேற்ற மற்றும் தொழில் முனைதல் அமைச்சக ஊழியர்கள் குறைந்தது ஒரு நாள் ஊதியத்தை பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு வழங்குகிறார்கள்

Posted On: 29 MAR 2020 6:40PM by PIB Chennai

நாவல் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலைத் தடுக்க அரசின் தயார்நிலையின் ஒரு பகுதியாக, நாடெங்கிலும் உள்ள அனைத்து தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களையும், அவைகளின் விடுதிகளையும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்றுவதற்கு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களிடையே சமூக இடைவெளியை ஊக்கப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மூன்று வாரங்களுக்கு பொது முடக்கத்துக்கு வழி வகுத்துள்ள மத்திய அரசின் தயார் முயற்சிகளோடு ஒத்துழைப்பதற்காக இந்த முடிவை அமைச்சகம் எடுத்துள்ளது.

ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சுகாதாரப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் பேரின் பட்டியலையும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் அளித்துள்ளது. பல்வேறு பணி வகைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள இவர்கள், நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கும், சிகிச்சைக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லது மருத்துவமனைகளில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களைப் பார்த்துக் கொள்ளும் முயற்சிகளுக்கும் வலு சேர்ப்பார்கள்.

அதோடு, 2,000 சுகாதாரப் பயிற்சியாளர்கள் மற்றும் 500 சுகாதார மதிப்பீட்டாளர்களின் பட்டியலும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் பகிரப்பட்டுள்ளது.

********



(Release ID: 1609130) Visitor Counter : 133