மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொரோனா நோய்த் தொற்றுக் காலம் முடிந்த பிறகு ஏற்படக்கூடிய வாசிப்பின் தேவைக்காக, அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஏற்ற தகவல்களைத் தருகின்ற, “கொரோனா ஆய்வு வரிசை” புத்தகங்களை இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புத்தக நிறுவனம் வெளியிட உள்ளது.

Posted On: 29 MAR 2020 4:45PM by PIB Chennai

கொரோனா பெருந்தொற்றின் அபரிதமான உளவியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை வரும் காலங்களில் மனித சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள புத்தக வெளியீடு மற்றும் புத்தக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பான தேசிய புத்தக நிறுவனம் இதனை உணர்ந்து ”கொரோனா ஆய்வு வரிசை” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக புத்தகங்களை வெளியிட இருக்கிறது. கொரோனா நோய் தொற்றுக் காலம் முடிந்த பிறகு ஏற்படக்கூடிய வாசிப்பின் தேவைக்காக, அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஏற்ற தகவல்களை வழங்கவும் ஆவணப்படுத்தவும், இந்த முயற்சியானது தொடங்கப்படுகிறது.  “இந்த அளவிற்கான தேசிய நெருக்கடியை எதிர்கொள்ளும் முயற்சியில், ஒரு தேசிய நிறுவனமாக   நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரிவின் கீழ் புதிய நடவடிக்கைகள் எடுப்பது எங்களது கடமை என நம்புகிறோம்.  அதாவது புதிய வாசிப்புக்கான புத்தகங்கள் என்ற முறையில் உதவி அளிப்பது எங்கள் கடமை ஆகும்.  “கொரோனா ஆய்வுகள் தொடர்” என்பது எங்களது நீண்டகாலப் பங்களிப்பாக இருக்கும்.  கொரோனா காலகட்டத்தின் பல்வேறு கூறுகளை வாசகர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை அதில் ஈடுபடுத்துவதாக இந்தத் தொடர் அமையும்.  குறிப்பிட்ட மையக்கருத்துகளில் பல்வேறு இந்திய மொழிகளில் விலை குறைவான புத்தகங்கள் வெளியிடப்படும்.  இந்த வகை முயற்சியில் எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும் ஈடுபடுவதற்கு ஏற்ற பொருத்தமான வாய்ப்பை இது வழங்கும் என்று இந்தியாவின் தேசிய புத்தக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கோவிந்த் பிரசாந்த் ஷர்மா கூறி உள்ளார்.



(Release ID: 1609068) Visitor Counter : 194