பாதுகாப்பு அமைச்சகம்

கோவிட்- 19 அச்சுறுத்தலுக்கு இடையே, பாலங்கள் நிர்மாணம் மற்றும் பனிக்கட்டிகள் அகற்றும் பணிகளில் எல்லைப்புற சாலை அமைப்பு ஈடுபட்டுள்ளது

Posted On: 28 MAR 2020 12:33PM by PIB Chennai

கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு இடையில், எல்லைப்புற சாலைகள் அமைப்பின் பணியாளர்கள், தபோரிஜோ பாலத்தை (430 அடி பல் தடுப்பு பெய்லி பாலம்) அமைக்கும் பணியை நிறைவு செய்வதில் இடையறாமல் ஈடுபட்டு வருகின்றனர். அருணாச்சலப் பிரதேசம் சுபன்சிரி மாவட்டத்தில், சீன எல்லை நெடுகிலும் , அமைந்துள்ள 451 கிராமங்களுக்கும், அங்கு முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கும், தகவல் தொடர்பை அளிக்கும் ஒரே ஆதாரமாக அது திகழ்கிறது. தற்போதைய பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால், உள்ளூர் நிர்வாகத்தின் சிறப்பு வேண்டுகோளுக்கு இணங்க, அருனங்க் திட்டப்பணியாளர்கள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எல்லைப்புற சாலைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முக்கிய தகவல் தொடர்பு பணியை  திட்டிமட்ட தேதிக்குள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் முடிக்க உறுதி பூண்டுள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாட்டின் வடபகுதியில், மணாலி- லே பிரிவில், பனிப்படலத்தை அகற்றும் நடவடிக்கையில் எல்லைப்புற சாலை அமைப்பு தற்போது ஈடுபட்டுள்ளது. மோசமான வானிலை, கோவிட் -19 அச்சுறுத்தலால், லாஹாவல் பள்ளத்தாக்கு மற்றும் லடாக்குக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கால வரம்புக்கு இடையில், இதன் பணியாளர்கள் இரவு பகலாக இதில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைக்கு, ரோஹ்டங், பரலச்சாலா கணவாய்களில் பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் நான்கு குழுக்கள் ஈடுபட்டுள்ளன. எல்லைப்புற சாலை அமைப்பு பணியாளர்கள் முதல்முறையாக சர்ச்சுவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு பிரம்மாண்டமான பரலச்சாலா கணவாயில் சர்ச்சு பகுதியிலிருந்து இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லைப்புற சாலை அமைப்பு, பாதுகாப்பு அமைச்சகத்தின் மிக முக்கியமான அமைப்பாகும். எந்தவித வசதியும் இல்லாத, தொலைதூர எல்லைப்புறங்களில், பாதுகாப்பு படையினருக்கு உதவும் வகையில், சாலைக் கட்டமைப்பை உருவாக்கி ,பராமரிக்கும் மிக முக்கியமான பணியில் இது ஈடுபட்டு வருகிறது.

 

***********(Release ID: 1608900) Visitor Counter : 182