அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் 19 பாதிப்பை நாடு முழுக்கக் கண்டறிதல் , ஆராய்ச்சி – மேம்பாட்டின் துணையுடன், தீர்வுகளை ஊக்கப்படுத்தும் முயற்சிகள், தொடக்கப்பணி ஆதரவை அதிகரித்தல் ஆகியவற்றை அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST) தொடங்கியுள்ளது.

DST-யின் தன்னாட்சி நிறுவனமான திருவனந்தபுரம் SCTIMST, கோவிட் - 19 ஏற்படுத்திய ஆரோக்கியத்துக்கான சவால்களை எதிர்கொள்வதற்கு 8 மூல வகை மாதிரிகளை உருவாக்கியுள்ளது

Posted On: 27 MAR 2020 5:09PM by PIB Chennai

கோவிட் - 19 நோய்த் தொற்று காரணமாக பொது சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்ற தேசத்தின் அழைப்புக்கு தன் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், அதன் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களின் கட்டமைப்புகள் மற்றும் அறிவியல் அமைப்புகள் ஆகியவற்றின் பல்வேறு பணிகளை நாடு முழுக்க ஒருங்கிணைத்து இதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அறிவியல் & தொழில்நுட்பத் துறை (DST) ஈடுபட்டுள்ளது.

கோவிட் 19 நோய்த் தொற்று தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளும், புதிய அணுகுமுறைகளும் மூன்று அம்சத் திட்டங்கள் மூலம் கையாளப்படுகின்றன. இவை (1) விரிவான தீர்வுகளைக் கண்டறிதல் - இதற்கு ஆராய்ச்சி-மேம்பாட்டு ஆதரவு, உற்பத்தி, துணைபுரிதல் ஆதரவுக்குத் தேவைப்படக் கூடிய பொருள்கள் வசதியுடன் கூடிய ஸ்டார்ட் அப்கள் (2) சந்தைக்கு  அனுப்பப்படக்கூடிய பொருள்களை அடையாளம் காணுதல் - இதற்கு தொடக்க வசதிகள் தேவை; (3) ஏற்கெனவே சந்தையில் இருக்கும் தீர்வுகளுக்கு ஆதரவு, அங்கு  உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவைப்படும் கட்டமைப்பு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு கணிசமான ஆதரவுத் தீர்வுகள் என்பவையாக இருக்கும்.

கோவிட் 19 மற்றும் சுவாச மண்டலத்தில் வைரஸ் தொற்று குறித்து குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட IRHPA (உயர் முன்னுரிமை துறையில் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்துதல்)-வின் கீழ் சிறப்பு அழைப்புகளின் அங்கமாக, முன்மொழிவுகளை வரவேற்பதாக, அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான அறிவியல் & பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (SERB) ஏற்கெனவே அறிவித்துள்ளது.  புதிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்படியாகும் செலவிலான பரிசோதனை முறைகளை உருவாக்குவதற்கு தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை தீவிரப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 மார்ச் 31 ஆம் தேதிக்குள் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு இதில் கோரப்பட்டுள்ளது. நாடு முழுக்க விஞ்ஞானிகளிடம் இருந்து இதற்கு ஆக்கபூர்வமான வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவிட் 19 பாதித்த நோயாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தல், வீட்டிலேயே பயன்படுத்தும் சுவாச உதவி உபகரணங்கள் தயாரிக்கும் முன்மொழிவுகள் குறித்து,  அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் இந்திய அரசின் சட்டபூர்வ அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டுக்கழகம் (TDB) ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் 30 ஆம் தேதிக்குள் இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோவிட் 19 நோயைக் கண்டறிதலுக்கான உபகரணங்கள், தெர்மல் ஸ்கேனர்கள், செயற்கைப் புலனறிதல், ஐ.ஓ.டி. அடிப்படையில் முடிவுகள் எடுப்பதில் ஆதரவான நடைமுறைகள், வென்டிலேட்டர்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு உள்ளிட்ட தீர்வுகளைக் கொண்டவையாக TDB-யில் சுமார் 190 நிறுவனங்கள் ஏற்கெனவே பதிவு செய்துள்ளன.

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் திருவனந்தபுரத்தில் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீசித்ரா திருநல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SCTIMST), கோவிட் 19 காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார சவால்களை எதிர்கொள்ள 8 மூல முன்மாதிரிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. மேலும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவு பெற்ற, ஆயத்தகால நிறுவனமான SCTIMST-TIMed-ல், கோவிட் 19 நோயாளிகளை மேலோட்டமாக தேர்வு செய்து பிரிப்பதற்கு, செயற்கைப் புலனறிதல் வசதியுடன் கூடிய எக்ஸ்-ரே  வசதியுடன் குறைந்த செலவிலான ஒரு தொழில்நுட்பக் கருவியைத் தயாரிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

கோவிட் 19 போன்ற நோய்களை எதிர்கொள்வதில், நாடு முழுக்க உள்ள 150க்கும் மேற்பட்ட ஆயத்தகால பரிசோதனை மையங்களில், ஆய்வில் உள்ள அனைத்து புதுமை சிந்தனைகளையும் ஒருங்கிணைத்துப் பட்டியலிடும் முயற்சியை, அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய அறிவியல் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகம் தொடங்கியுள்ளது. நாடு முழுக்க டி.எஸ்.டி.யின் ஆயத்தகால பரிசோதனை மையங்களில் இருந்து புதுமை சிந்தனை தீர்வுகளை அளிக்கும் 165 ஸ்டார்ட் அப் முயற்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நோய்த் தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சையில் உதவிகரமாக இருத்தல், குணமாக்குதல் வகைகளிலான தீர்வுகளை உள்ளடக்கியதாக இவை உள்ளன. இவை அனைத்தும் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. புனே பல்கலைக்கழகத்தில் சைடெக் பூங்காவில் ஆயத்தநிலை பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் முயற்சிக்கு அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆரம்பகட்ட நிதி வசதி செய்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளில் வைரஸ் அளவைக் குறைக்கும் நோக்கில் Airon Ioniser கருவிகளை வைப்பதை அதிகரிக்க இந்த உதவி அளிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பத்துறை ``கோவிட் 19 பணிக் குழு'' ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களில், கல்வி நிலையங்களில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் (MSME) உள்ள தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. DST, DBT, ICMR, MeitY, CSIR, AIM, MSME, ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும்  AICTE நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளனர். உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புள்ள, நம்பிக்கை தரும் ஸ்டார்ட் அப் முயற்சிகளை அடையாளம் கண்டு, நிதி அல்லது வேறு உதவி தேவைகளைக் கண்டறிந்து, உத்தேச தேவையை சமாளிக்கும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்குவதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது இந்தக் குழுவின் நோக்கமாகும்.

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதன் மூலம் கோவிட் 19 நோய்த் தொற்றின் சவால்களை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராவதற்கு இது உதவியாக இருக்கும்.

*****


(Release ID: 1608833) Visitor Counter : 176