பிரதமர் அலுவலகம்
கோவிட் - 19 கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் கலந்துரையாடல்
தொடர்ந்து விழிப்பாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்
தொற்று பரவாமல் தடுப்பதில் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர்
வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாம் முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம்; பதற்றம் அடையத் தேவையில்லை: பிரதமர்
கோவிட் - 19 கட்டுப்படுத்துவது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் தாக்கம் குறித்து முதலமைச்சர்கள் பாராட்டு
Posted On:
20 MAR 2020 7:54PM by PIB Chennai
கோவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்
சவாலை ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்
தொற்றுநோய் தாக்கம் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்று பிரதமர் கூறினார். இந்த விஷயத்தில் அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தச் சவாலை எதிர்கொள்ள, குடிமக்களின் பங்கேற்பு முக்கியம் என்று கூறிய அவர், பதற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவலாகப் பரவியுள்ள நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அதிமுக்கியமான விஷயம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதில் அடுத்த 3 -4 வார காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முக்கியமானவையாக இருக்கும் என்றார் அவர். நோயைக் கட்டுப்படுத்துவதில், `பொது இடங்களில் இடைவெளி' பராமரித்தல் என்ற அம்சம் மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார். இந்த விஷயம் நல்ல முறையில் அமல் செய்யப்படுவதை முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
இந்த வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இதில் பிரதமர் எப்படி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார் என்பது குறித்தும் மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் திருமிகு.பிரீத்தி சுதன் விளக்கினார். சர்வதேசப் பயணிகளை கண்காணித்தல், பரவுதலை அறிய சமுதாய கண்காணிப்பு, பரிசோதனை உபகரணங்கள் கையிருப்பு, பயண கட்டுப்பாடு அறிவுறுத்தல்கள், வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றி அழைத்து வருதலில் மாநிலங்களுடன் மத்திய அரசு கொண்டுள்ள ஒத்துழைப்பு நடவடிக்கைகள் பற்றி அவர் மேலோட்டமாக விவரித்தார்.
நோய் பரவுதலின் இரண்டாவது கட்டத்தில் இப்போது இந்தியா இருக்கிறது என்று ஐ.சி.எம்.ஆர். டைரக்டர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா கூறினார். 3ம் கட்ட பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கக் கூடிய வரம்பு நிலைக்குள் இந்தியா இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மருத்துவ வசதிகளை தேவைகளின் அடிப்படையில் மட்டும் பயன்படுத்துதல் பற்றியும், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை உருவாக்குதலை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பது பற்றியும் அவர் கூறினார்.
முதலமைச்சர்கள் பேச்சு
கோவிட் - 19 கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவுக்கு முதலமைச்சர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையின் தாக்கம் குறித்து அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்தப் பணிகள் பற்றி பிரதமரிடம் முதலமைச்சர்கள் தகவல்களைத் தெரிவித்துக் கொண்டனர். பரிசோதனை வசதிகளை அதிகரிக்க உதவ வேண்டும் என்றும், பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ள மக்களுக்கு சிகிச்சைக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு 20-21 ஆம் ஆண்டுக்கான நிதிப் பட்டுவாடாக்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களை இதில் அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அனைத்து முதலமைச்சர்களும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். தீவிரத் தொற்று பரவலைத் தடுப்பதில் மத்திய அரசுடன் அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.
மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்க பிரதமர் உறுதி
மாநிலங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், ஆலோசனைகளை வழங்கியதற்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார் சுகாதாரத் துறை அலுவலர்கள் எண்ணிக்கையை திரட்டி வைத்துக் கொள்ள வேண்டியதும், சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசரத் தேவைகளாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் வியாபாரிகளுடன் முதலமைச்சர்கள் காணொலி காட்சி மூலம் பேசி, பதுக்கல் மற்றும் விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அவர்களை சம்மதிக்க வைக்க மென்மைான அதிகாரத்தைப் பயன்படுத்துமாறும், தேவையான சமயங்களில் சட்ட விதிகளைப் பயன்படுத்துமாறும் பிரதமர் யோசனை தெரிவித்தார்.
பொருளாதார சவால்களை சிறப்பாக கையாள்வதற்கான பொருத்தமான அணுகுமுறையை மத்திய அரசு அமைத்துள்ள கோவிட் - 19 பொருளாதார பணிக் குழு உருவாக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படுவதையும், அனைத்து அறிவுறுத்தல்களும் முறையாக பின்பற்றப்படுவதையும் முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். கோவிட் - 19 க்கு எதிரான போராட்டத்தில் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட்டுவிடக் கூடாது என்று அவர் கூறினார்.
****
(Release ID: 1607468)
Visitor Counter : 269