சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது குறித்தும், இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் 2020 மார்ச் 5 ஆம் தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் மாநிலங்களவையில் தாமாக முன்வந்து அளித்த அறிக்கை
Posted On:
05 MAR 2020 12:07PM by PIB Chennai
- மாநிலங்களவையில் பிப்ரவரி 7 ஆம் தேதியும், மக்களவையில் பிப்ரவரி 10 ஆம் தேதியும் நான் அளித்த அறிக்கையின் தொடர்ச்சியாக, கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தற்போதைய சூழ்நிலை குறித்தும், இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மதிப்புக்குரிய உறுப்பினர்களுக்கு தகவல்கள் அளிக்க நான் விரும்புகிறேன்.
- முன்னர் குறிப்பிட்டிருப்பது போல, மனிதர்கள் மற்றும் விலங்குகளில் உடல்நலக் குறைவை ஏற்படுத்துபவையாக கொரோனா வைரஸ் உள்ளன. அரிதாக, விலங்குகளிடம் உருவாகும் கொரோனா வைரஸ், 2003ல் ஏற்பட்ட சார்ஸ், 2014ல் ஏற்பட்ட மெர்ஸ் போல மக்களிடம் பரவக் கூடியதாக இருக்கிறது.
- சீனாவில் 2019 டிசம்பர் 31 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து, சீனாவில் அனைத்து மாகாணங்களிலும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயை உலக சுகாதார நிறுவனம் COVID-19 என்று குறிப்பிட்டுள்ளது.
- மார்ச் 4 ஆம் தேதி நிலவரத்தின்படி சீனாவில் 80,270 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 2981 மரணங்கள் பதிவாகியுள்ளன. நோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களின் தினசரி எண்ணிக்கை சீனாவில் இப்போது குறைந்து வருகிறது என்றாலும், இந்த நோய் உருவான வுஹான் நகரம் மற்றும் ஹுபேய் மாகாணத்தில் இன்னும் புதியவர்களுக்கும் இந்த நோய் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவுக்கு வெளியில், ஹாங்காங், மக்காவ், தைவான் உள்ளிட்ட 78 நாடுகளில், 12,857 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு, அதில் 220 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 30 நாடுகளில் உள்நாட்டில் நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதை சர்வதேச அளவில் அவசர முக்கியத்துவம் தர வேண்டிய பொது சுகாதாரப் பிரச்சினையாக 2020 ஜனவரி 30 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. உலக அளவில் ``மிகத் தீவிரமான'' ஆபத்து இருப்பதாக 2020 பிப்ரவரி 28 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இது ஆட்கொல்லி தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவிக்காவிட்டாலும், தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து நாடுகளின் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அமைப்பின் அறிவுறுத்தல் வருவதற்கு முன்னதாக ஜனவரி 17 ஆம் தேதியில் இருந்தே அடிப்படை நிலையில் ஆயத்தங்களை இந்திய அரசு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருவருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் 14 நாட்களுக்குள் அது எப்போது வேண்டுமானாலும் தீவிரம் அடையலாம். காய்ச்சல், இருமல், சுவாசத்தில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகளாக உள்ளன. கொரோனா வைரஸ் பாதித்தவர்களை தனிமையில் வைத்து சிகிச்சை தர வேண்டும், மேற்கொண்டு பரவாமல் தடுக்க ஒட்டுமொத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
- நமது நாட்டைப் பொருத்த வரையில் மார்ச் 4 ஆம் தேதி வரையில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் கேரளாவில் முன்னர் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர். கடந்த 3 நாட்களில் பயணம் மேற்கொண்டவர்களில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்லியில் ஒருவருக்கும் (இத்தாலியில் இருந்து வந்தவர்), தெலங்கானாவில் ஒருவருக்கும் (துபாயில் இருந்து வந்தவர், துபாயில் சிங்கப்பூர்வாசி ஒருவருடன் நெருக்கமாக இருந்தவர்) இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது. இருவரும் மருத்துவ ரீதியில் ஆரோக்கியமாக உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் மேலும் ஆறு பேருக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லியுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். தொகுப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், இதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இத்தாலிய சுற்றுலாவாசி ஒருவருக்கும், அவருடைய மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது ராஜஸ்தானில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் டெல்லி திரும்பிய போது, அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த வேறு 14 பேருக்கும், இந்தியாவைத் சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்கும், இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் ஒருவருக்கு (இத்தாலி பயணம் மேற்கொண்டவர்) இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.
- உலகம் முழுக்க தொடர்ந்து அதிகரித்து வரும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், சுகாதாரத் துறை மட்டுமின்றி, அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிகிறது. நம்முடைய ஆயத்த நிலை மற்றும் செயல்பாடுகளை பிரதமர் தனிப்பட்ட முறையில் நேரடியாக அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இந்த நோய் வருவதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் இந்திய அரசு தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நான் தினமும் நிலைமையை ஆய்வு செய்து வருகிறேன். நிலைமையைக் கண்காணிப்பதற்கு, வெளியுறவு அமைச்சர், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், உள்துறை இணை அமைச்சர், கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட எனது தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. 2020 பிப்ரவரி 3 ஆம் தேதி குழு அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை நான்கு முறைகள் கூடியுள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு அமைச்சகங்கள், வெளியுறவு, சிவில் விமானப் போக்குவரத்து, உள்துறை, ஜவுளி, பார்மசூட்டிகல்ஸ், வணிகம் மற்றும் இதர துறைகளின் அதிகாரிகளுடன் அமைச்சரவை செயலாளர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாநில தலைமைச் செயலாளர்களுடனும் அவர் ஆய்வு நடத்தி வருகிறார். எனது அமைச்சகம் தொடர்ச்சியாக சூழ்நிலைகளைக் கவனித்து வருகிறது. மாநில அதிகாரிகளுடன் தினமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணத்துக்கான நமது முதலாவது அறிவுறுத்தல் 2020 ஜனவரி 17ல் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்த சூழ்நிலைகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இப்போதைய நிலையில் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
- இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் குடிமக்களுக்கு 03.03.2020 அல்லது அதற்கு முன்னதாக அளிக்கப்பட்ட சாதாரண / மின்னணு விசாக்களும் (ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் இருந்து வருபவர்களுக்கு, வந்த பிறகு அளிக்கும் விசா உள்பட) இன்னும் இந்தியாவுக்குள் வராதவர்களுக்கான அனுமதிகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
- சீன மக்களுக்கு 05.02.2020 அல்லது அதற்கு முன்னர் அளிக்கப்பட்ட சாதாரண / மின்னணு விசாக்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அது அப்படியே அமலில் இருக்கும்.
- சீனா, ஈரான், இத்தாலி, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 01.02.2020 அல்லது அதற்குப் பிறகு பயணம் மேற்கொண்டவர்கள், இன்னும் இந்தியாவுக்கு வராதிருந்தால் அவர்களுடைய சாதாரண / மின்னணு விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.
- தூதர்கள், ஐ.நா. அதிகாரிகள் மற்றும் இதர சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், ஓ.,சி.ஐ. அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் மேற்படி நாடுகளில் இருந்து வரும் விமான அலுவலர்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், இந்தியாவுக்குள் வரும் போது அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச விமானங்களில் பயணம் மேற்கொண்டு எந்த விமான நிலையத்தில் இருந்தும் இந்தியாவுக்குள் நுழையும் பயணிகள், சுய அறிவிக்கை படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். தொலைபேசி எண், இந்தியாவில் அவர்களுடைய முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்கள், பயண விவரம் உள்ளிட்டவற்றை படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகள் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும்.
- சீனா, ஈரான், கொரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய குடிமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளுக்கு, அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- 2020 ஜனவரி 18 ஆம் தேதியில் இருந்தே பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி விமான நிலையங்களில் இந்தப் பரிசோதனை தொடங்கி பிறகு மொத்தம் 21 விமான நிலையங்களுக்கு அதிகரிக்கப்பட்டது. சூழ்நிலைகள் மாறி வரும் நிலையில், சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் இருந்து நேரடி விமானங்கள் மூலம் வரும் பயணிகள் அனைவருக்கும் ஆரம்பத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்றில் இருந்து, நாட்டுக்குள் வரும் சர்வதேச பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பயணிகளும் தாங்களாக முன்வந்து படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து விமானங்களில் பயணத்தின் போதே அறிவிப்பு செய்யப்படுகிறது. மார்ச் 4 ஆம் தேதி நிலவரத்தின்படி மொத்தம் 6241 விமானங்களில் வந்த 6,11,167 பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பரிசோதனை நடைமுறைகள் செம்மையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து விமான நிலையங்களுக்கும் சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில், தனிமை சிகிச்சை வார்டுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- 12 பெரிய துறைமுகங்கள் மற்றும் 65 சிறிய துறைமுகங்களிலும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வரும் பயணிகள் மற்றும் கப்பல் அலுவலர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தி, கொரோனா பாதிப்பு இருந்தால் தனிமையாக வைத்து சிகிச்சை அளிக்கும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 4 ஆம் தேதி நிலவரத்தின்படி துறைமுகங்களில் மொத்தம் 16,076 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
- உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், சிக்கிம் மற்றும் பிகார் மாநில அரசுகள், சீமா சாஸ்த்ரா பால் (எஸ்.எஸ்.பி.) மற்றும் லேண்ட் போர்ட் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் சர்வதேச எல்லையில் மருத்துவப் பரிசோதனைச் சாவடிகள் அமைப்பதற்கும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. எல்லையோரங்களில் உள்ள பகுதிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தி, இந்த நோயின் தன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இது செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், சிக்கிம் மற்றும் பீகார் மாநிலங்களில் சர்வதேச எல்லையை ஒட்டிய கிராமங்களுக்கு எட்டு மத்திய குழுக்கள் சென்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தியது, மேற்படி தகவல்கள் விளக்கப்பட்டது குறித்து ஆய்வு நடத்தியுள்ளன. மொத்தம் 3823 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, 11,20,529 பேருக்கு எல்லைப்புற சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- சீனாவில் ஹுபேய் மாகாணம் தொடர்ந்து சீலிடப்பட்டிருப்பதால், வுஹான் நகரம் மற்றும் அருகில் உள்ள ஹுபேய் மாகாணத்தில் உள்ள இந்திய மாணவர்கள், வேலை பார்க்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வருவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில், வுஹானில் இருந்து டெல்லிக்கு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி இரண்டு சிறப்பு பயணங்களுக்கு ஏர் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் 654 பயணிகள் திரும்ப அழைத்து வரப்பட்டனர். அதில் 647 இந்தியர்களும், (வெளியேற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வுஹானில் இருந்த இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவரும் இதில் அடங்குவர்). மாலத்தீவைச் சேர்ந்த 7 பேரும் அடங்குவர். சாவ்லாவில் உள்ள ஐ.டி.பி.பி. முகாமிலும், மானேசாரில் உள்ள ராணுவ தனிமைப் பாதுகாப்பு மையத்திலும் வைத்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. நோய் பாதிப்பு இல்லை என்று 2020 பிப்ரவரி 18 ஆம் தேதி கண்டறிந்து, அனுப்பி வைக்கப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகும் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
- இதுதவிர, 2020 பிப்ரவரி 26 ஆம் தேதி வுஹானில் இருந்து 112 பேரை இந்திய விமானப் படை விமானம் இந்தியாவுக்கு அழைத்து வந்தது. அதில் 76 இந்தியர்களும், மியான்மர், வங்கதேசம், மாலத்தீவுகள், சீனா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மடகாஸ்கர் நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அங்கிருந்து வெளியேறி வந்தவர்கள் பிப்ரவரி 27 ஆம் தேதி டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்கள் உரிய நடைமுறைகளின்படி 14 நாட்கள் தனிமை சிகிச்சைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். இதுவரை அவர்களுக்கு நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதையும், ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் சார்பில் சீனாவுக்கு நல்லெண்ண அடிப்படையில் அளிக்கப்பட்ட தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு அகற்றும் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் இந்த விமானங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.
- சீனாவில் பிற பகுதிகளில் உள்ள இந்திய மக்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர். அவர்களுடைய ஆரோக்கியம் பற்றிய தகவல்களை கண்காணித்து வருகின்றனர்.
- பிப்ரவரி 27 ஆம் தேதி அடுத்த கட்டமாக 125 பேரை ஏர் இந்தியா விமானம் இந்தியாவுக்கு அழைத்து வந்தது. கொரோனா வைரஸ் பாதித்து ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மானேசரில் ராணுவ வளாகத்தில் 14 நாட்கள் தனிமை பாதுகாப்பு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பதையும், ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்கள் நாடு முழுக்க கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசத்தில் சிரமம் இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு கட்டமைப்பு மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மார்ச் 4 ஆம் தேதி நிலவரத்தின்படி 28529 பேர் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மாநில சுகாதாரத் துறை செயலரின் தலைமையின் கீழ், கள அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், சுகாதார அலுவலர்களின் துரித செயல்பாட்டுக் குழுவினர் ஆகியோர் அவர்களை தினந்தோறும் கண்காணித்து வருகின்றனர். நோய் பரவுதல் கண்டறியப்பட்டால் தேவைகளைச் சமாளிக்க வசதியாக அனைத்து முக்கிய மருத்துவ மனைகளிலும் தனிமை சிகிச்சை வார்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- கண்காணிப்பு செய்தல், நபர்களை பின்தொடர்ந்து கவனித்தல், நாட்டுக்குள் நுழையும் முனையத்தில் கண்காணிப்பு, ஆய்வக மாதிரிகள் சேகரிப்பு, சீல் செய்து அனுப்பி வைத்தல், ஆய்வக நடைமுறைகள் மற்றும் நோய்த் தொற்று தடுப்பு மற்றும் சுகாதார மையங்களில் கட்டுப்பாடு வசதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு உதவும் வகையில் இந்த அமைச்சகம் வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் & N95 முகக் கவச உறைகள் போன்ற முக்கிய பொருட்கள் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு, அவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் போதிய அளவுக்கு மத்திய மாநில அரசுகள் கையிருப்பு வைத்துள்ளன.
- புனேயில் உள்ள தேசிய நச்சுயிரியல் நிறுவனம் தான் வழிகாட்டும் ஆய்வகமாக உள்ளது. புதிதாக உருவாகும் / மீண்டும் பரவும் தொற்று நோய்களைச் சமாளிப்பதற்கான ஐ.சி.எம்.ஆர்.-ன் ஆயத்த நிலைகளைப் பொருத்த வரையில், கரோனா வைரஸ் மூலக்கூறு பகுப்பாய்வு திறனை புனே நிறுவனம் உருவாக்கி வைத்துள்ளது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாதிரிகள் பரிசோதனை வசதி மேலும் 15 ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த வசதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, மேலும் 19 ஆய்வகங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்பு மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
- ஆபத்து நிலை தகவலை தெரிவிக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டு, மாநிலங்கள் மூலம் பிராந்திய மொழிகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியிலான தகவல்கள் மற்றும் தேவையான தகவல்கள் அனைத்தும் வெளியிடப் பட்டுள்ளன. சுகாதார அமைச்சகம் சார்பில் தினமும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன. 011-23978046 என்ற எண்ணில் 24 X 7 கட்டுப்பாட்டு அறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 9200 அழைப்புகளுக்கு இதில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 667 சர்வதேச அழைப்புகளும் அடங்கும்.
- சூழ்நிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அறிந்து கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பின் தலைமை அலுவலகம், பிராந்திய அலுவலகம் மற்றும் இந்திய அலுவலகத்துடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
- நோயின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலைக்கு வேண்டிய வசதிகளை உருவாக்கிக் கொள்வதில் நாம் கவனம் செலுத்துகிறோம். கண்காணிப்பு, ஆய்வகப் பரிசோதனை, மருத்துவமனை ஆயத்த நிலை, சிகிச்சை பொருள்கள் கையிருப்பு மேலாண்மை, சுகாதாரத் துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்தல், இந்த அலுவலர்களுக்கு நோய் பரவும் ஆபத்தைத் தடுத்தல் போன்றவை உள்ளிட்ட செயல்பாடுகளுக்கும் ஆயத்தமாவதில் கவனம் செலுத்தப்படுகிறது. உலகம் முழுக்க, குறிப்பாக இந்தியாவில் மாறி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
- உலக அளவில் நோய்கள் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், நமக்கு புதிய சவால்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நோய் கண்டறியப்பட்டவர்களை, பின்தொடர்ந்து கவனித்தலுக்கு, பல இடங்களில் பல நூறு தொடர்புகளை கண்காணிக்க வேண்டியுள்ளது. அவர்களுடைய உடல் நலனைக் கவனிக்க வேண்டியுள்ளது. அதேபோல, ஆக்ராவில் கண்டறியப்பட்ட நிகழ்வுகளில், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பரவும் என்பதால், ஆக்ராவில் குழு நேர்வுகளுக்கான தனிமைப்படுத்தல் திட்டம் தேவையாக இருந்தது.
- ஈரானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட டெஹ்ரான் மற்றும் குவாம் பகுதியில் சிக்கியுள்ள இந்திய யாத்ரிகர்கள் மற்றும் மாணவர்கள் பிரச்சினை இந்தியாவுக்கு அடுத்த முக்கிய கவலையாக உள்ளது. அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது தொடர்பாகவும், அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வருவது தொடர்பாகவும் ஈரான் அதிகாரிகளுடன் இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளது.
- பயணம் தொடர்பான நேர்வுகளைக் கையாள்வதில், உள்நாட்டில் அது பரவாமல் தடுப்பது கூடுதல் சவாலாக இருக்கிறது. அவர்களின் பகுதியில் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிறைய அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். அனைத்து மாநிலங்களுக்கும் நோய்த்தடுப்பு செயல் திட்டத்தை நாங்கள் அளித்திருக்கிறோம். கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும், மற்ற அமைச்சகங்களின் மருத்துவமனை அலுவலர்களுக்கும் தேசிய அளவில் 2020 மார்ச் 6 ஆம் தேதி பயிற்சி பயிலரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயத்த நிலைகளை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் செல்லுமாறு மூத்த அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.
- நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட அளவில் முன்னோடி அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார் என குறிப்பிட்டுள்ளோம். தனிமைப்படுத்தி வைக்கும் பகுதி, இடைநிலைப் பகுதி மற்றும் கண்காணிப்பை உறுதி செய்வதற்கான திட்டம், இடைமுக குழுக்கள் மூலம் நபர்களை பின்தொடர்ந்து கண்காணித்தல் குறித்து மாநிலங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்பதை இந்த அவைக்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.
*****
(Release ID: 1605412)
|