பிரதமர் அலுவலகம்

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

Posted On: 22 FEB 2020 9:01PM by PIB Chennai

ஒடிசாவில் முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.  இந்த நிகழ்வின் போது உரையாற்றிய பிரதமர், இன்றைய நாள் போட்டிகளின் தொடக்கம் மட்டுமல்ல, இந்தியாவில் விளையாட்டுகள் இயக்கத்தின் அடுத்தகட்ட தொடக்கமும் ஆகும் என்றார். இங்குள்ள நீங்கள், ஒருவர் மற்றவரோடு போட்டியிடுவது மட்டுமின்றி, உங்களுக்கு நீங்களேயும் போட்டியாளராக இருக்கிறீர்கள் என்றும் அவர் கூறினார்.

     “தொழில்நுட்பத்தின் வழியாக உங்களோடு நான் தொடர்பில் இருக்கிறேன். ஆனால், அங்குள்ள ஆர்வம், விருப்பம், உற்சாகம் ஆகிய சூழலை என்னால் அனுபவிக்க முடிகிறது.  இந்திய வரலாற்றில் முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் இன்று ஒடிசாவில் தொடங்குகின்றன. இந்தியாவின் விளையாட்டுகள் வரலாற்றில் இது சிறப்புமிக்க தருணமாகும்.  இந்திய விளையாட்டுகளின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய முன்னேற்றமாகவும் இது இருக்கும்” என பிரதமர் தெரிவித்தார்.

     விளையாட்டுகள் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துவதிலும், நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள இளைஞர்களின் திறனை அங்கீகரிப்பதிலும் கேலோ இந்தியா இயக்கம் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் கூறினார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது, அதில் 3,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.  ஆனால், வெறும் மூன்று ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து 6,000-க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

     “இந்த ஆண்டு பள்ளிகளுக்கு இடையேயான கேலோ இந்தியா போட்டிகளில் 80 சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இவற்றில் 56 சாதனைகளை முறியடித்தவர்கள் நமது புதல்விகள், வெற்றி பெற்றவர்கள் நமது புதல்விகள், அதிசயங்களை நிகழ்த்தியவர்கள் நமது புதல்விகள். இந்த இயக்கத்தின் மூலம் திறமைகள் வெளிப்பட்டிருப்பது பெரிய நகரத்திலிருந்து அல்ல, சிறுசிறு நகரங்களில் இருந்து என்பது முக்கியத்துவம் வாய்ந்தது” என்று பிரதமர் கூறினார்.

     கடந்த 5-6 ஆண்டுகளாக இந்தியாவில் விளையாட்டுகளை மேம்படுத்தவும், விளையாட்டுகளில் பங்கேற்கவும் முழுமையான முயற்சிகள் செய்யப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  திறமையைக் கண்டறிவதிலும், பயிற்சி மற்றும் தேர்வு நடைமுறைகளிலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.

     “இங்குள்ள விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்கக் கூடும். இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த விளையாட்டு வீரர்கள், காமன்வெல்த் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள், ஆசிய மாற்றுத் திறனாளி விளையாட்டுகள், இளையோர் ஒலிம்பிக்ஸ் போன்ற பல விளையாட்டு நிகழ்வுகளில் நாட்டிற்கு 200-க்கும் அதிகமான பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளனர்.  வரும் காலங்களில் 200-க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வெல்வது இலக்காக இருக்க வேண்டும். உங்களின் சொந்தத் திறமைகளை மேம்படுத்துவதும், உங்களின் ஆற்றலை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்று பிரதமர் கூறினார்.         

 

 

*****



(Release ID: 1604147) Visitor Counter : 128