பிரதமர் அலுவலகம்
அஸ்ஸாமின் கோக்ரஜாரில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
07 FEB 2020 6:30PM by PIB Chennai
பாரத மாதாவுக்கு ஜெய்!
பாரத மாதாவுக்கு ஜெய்!
பாரத மாதாவுக்கு ஜெய்!
மேடையில் வீற்றிருக்கும் அஸ்ஸாம் ஆளுநர் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்களே, பல்வேறு வாரியங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களே, போடோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களே, இதர பிரமுகர்களே, என்னை வாழ்த்துவதற்காக இங்கு பெருமளவு வந்துள்ள எனது சகோதர, சகோதரிகளே,
அஸ்ஸாமிற்கு நான் பல முறை வந்துள்ளேன். இந்த ஊருக்கும் நான் வந்திருக்கிறேன். இந்த பிராந்தியத்திற்கு பல ஆண்டுகளாக நான் வந்து சென்று கொண்டிருக்கிறேன். பிரதமரான பிறகும் கூட உங்களை சந்திப்பதற்காக மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் கூட, இன்று உங்கள் முகத்தில் காணப்படும் உற்சாகம், வண்ணமிகு ‘அரோனை’ மற்றும் ‘டோக்ஹோனா’-வை விட, அதிக திருப்திகரமாக தெரிகிறது.
எனது பொது வாழ்வு மற்றும் அரசியல் வாழ்வில் ஏராளமான பொதுக் கூட்டங்களை பார்த்திருப்பதுடன், அவற்றில் உரையாற்றியும் இருக்கிறேன். ஆனால், இதுபோன்ற மக்கள் கடலை என்வாழ்வில் நான் ஒருபோதும் கண்டதில்லை. விக்ரம் இன்று ஏற்பாடு செய்துள்ள இந்த பொதுக் கூட்டமே சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டமாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் நிச்சயம் கூறுவார்கள். இது உங்களால்தான் சாத்தியமாயிற்று. ஹெலிகாப்டரில் இருந்து நான் பார்த்தபோது, மனித தலைகளாகத்தான் காட்சியளித்தது. அந்தப் பாலத்தின் மீது ஏராளமானோர் நின்று கொண்டிருப்பதை பார்த்தபோது, யாராவது தவறிவிழுந்து விடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
சகோதர, சகோதரிகளே,
நீங்கள் அனைவரும் குறிப்பாக, தாய்மார்களும், சகோதரிகளும் என்னை வாழ்த்துவதற்காக பெருமளவில் வந்திருக்கிறீர்கள். எனவே, எனது நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. ஏனெனில், மக்கள் என்னை பிரம்பால் அடித்து விடுவார்கள் என்று சிலர் பேசி வருகின்றனர்; ஆனால், அதுபோன்ற எதுவும் இந்த மோடிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடாது, ஏனெனில், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்த்துக்களை பாதுகாப்பு கவசமாக நான் பெற்றிருக்கிறேன். உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். தாய்மார்களே, சகோதரிகளே, சகோதரர்களே, எனதரும் இளம் நண்பர்களே, எனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் பாராட்டுக்களை உங்களுக்கு தெரிவிக்க இங்கு வந்திருக்கிறேன். அஸ்ஸாமைச் சேர்ந்த எனதருமை சகோதர-சகோதரிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக நான் இன்று இங்கு வந்திருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் மோட்டார் சைக்கிள்களிலும், விளக்குகளை ஏந்தியவாறும், நீங்கள் எவ்வாறு பேரணியாக வந்தீர்கள் என்பதை நேற்று இந்த நாடே உற்று நோக்கியது. தீபாவளி நேரத்தில் கூட இவ்வளவு விளக்குகள் ஏற்றப்படுவதில்லை. இதுபோன்ற விளக்குகள் அனைத்து இடங்களிலும் ஏற்றப்பட இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி மூலம் நேற்று நான் அறிந்தேன். ஒட்டுமொத்த நாடும் இதைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது. சகோதர-சகோதரிகளே, இது லட்சக்கணக்கில் விளக்குகளை ஏற்றுவதைப் பற்றியது அல்ல, நாட்டின் இந்தப் பகுதியில் ஒரு புதிய தொடக்கத்திற்கு முக்கியமானதாகும்.
சகோதர-சகோதரிகளே,
கடமையை பின்பற்றியதால் நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த ஆயிரக்கணக்கான தியாகிகளை நினைவுகூரும் நாள் இது. போடோ இயக்கத்தின் தந்தையாக கருதப்படும் உபேந்திரநாத் பிரம்மா மற்றும் ரூப்நாத் பிரம்மா போன்ற சிறந்த தலைவர்களின் பங்களிப்பையும் நினைவுகூர வேண்டிய நாள் இது. இந்த உடன்பாடு ஏற்படுவதற்காக முக்கிய பங்காற்றிய அனைத்து போடோ மாணவர் இயக்கம், போடோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த இளம் நண்பர்கள், பிடிசி அமைப்பின் தலைவர் திரு ஹக்ரமா மஹிளாரே மற்றும் அஸ்ஸாம் அரசு ஆகிய அனைத்து தரப்பினரையும் நான் பாராட்டுகிறேன். ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பிலும் நான் உங்களை பாராட்டுகிறேன். இன்று 130 கோடி இந்தியர்களும் உங்களை பாராட்டி நன்றி கூறுகின்றனர்.
நண்பர்களே,
போடோ அமைப்பினர், இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த மக்கள், சமுதாயத்தினர், குருமார்கள், அறிஞர்கள், கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் ஆகிய உங்கள் அனைவரின் முயற்சிகளையும் கொண்டாடுவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் நாள் இது. உங்கள் அனைவரின் ஆதரவுடன்தான் இந்த நிரந்தரமான அமைதித் தீர்வு காணப்பட்டுள்ளது. அஸ்ஸாம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் 21 ஆம் நூற்றாண்டில் புதிய தொடக்கத்தை, புதிய விடியலை, புதிய உத்வேகத்தை வரவேற்கும் நாளாகவும் இது அமைந்துள்ளது. இந்த நிலத்தில் மீண்டும் வன்முறை இருள் படர இனி அனுமதித்து விட வேண்டாம். இனி இந்த நிலத்தில் எந்தவொரு தாயின் மகன், மகள் அல்லது எந்தவொரு சகோதரியின் சகோதரர், அல்லது எந்தவொரு சகோதரரின் சகோதரியும் ரத்தம் சிந்துவதை அனுமதிக்கக்கூடாது. இன்று முதல் வன்முறைக்கு இனி இடமளித்து விடக்கூடாது. காடுகளில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தங்களது மகனின் உயிர் எப்போது போகுமோ என்ற அச்சத்துடன், வாழ்ந்து வந்த தாய்மார்களும், சகோதரிகளும் இன்று என்னை வாழ்த்துகின்றனர். ஏனெனில், இன்று அத்தகைய புதல்வர்கள் தங்களது தாயின் மடியில் தலையை வைத்து நிம்மதியாக தூங்க முடியும். அத்தகைய தாய்மார்களும், சகோதரிகளும் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். பல்லாண்டு காலமாக இரவும், பகலும் துப்பாக்கிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நினைத்துப் பாருங்கள். ஆனால் இன்று அத்தகைய வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. அமைதியை விரும்பும் அஸ்ஸாம், அமைதி மற்றும் வளர்ச்சி, நட்புறவை விரும்பும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த உங்கள் அனைவரையும் என் இதயத்தின் ஆழ்மனதில் இருந்து வரவேற்கிறேன். நீங்கள் அனைவரும் புதிய இந்தியாவை படைக்க புதிய தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதில் அங்கம் வகிக்க வேண்டும்.
வன்முறைப் பாதையை இன்னமும் பின்பற்றுவோர், போடோ அமைப்பினரைப் போல, தங்களின் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டுமென்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
“வடகிழக்கு அல்லது நக்ஸல் பகுதிகள் அல்லது, ஜம்மு காஷ்மீரில் இன்னமும் ஆயுதங்கள் மற்றும் வன்முறை மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் போடோ இளைஞர்களிடமிருந்து பாடம் கற்று, உத்வேகம் பெற்று, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மீட்சி பெற்று, வாழ்க்கையைக் கொண்டாட தொடங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
போடோ ஒப்பந்தம்-அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரையும் அரவணைப்போம் என்பதன் பிரதிபலிப்பாகும்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினை இந்தியா கொண்டாடும் வேளையில் போடோ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
“அகிம்சையின் பயன்கள் எதுவாக இருந்தாலும், அனைவரும் அவற்றை ஏற்க வேண்டும் என்று காந்திஜி அடிக்கடி கூறுவார்” என பிரதமர் தெரிவித்தார்.
போடோ ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர், இது இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்தரும் என்றார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், போடோ பிராந்திய கவுன்சிலின் அதிகாரங்கள் மேலும் விரிவடைந்து வலுவாகும் என்று அவர் கூறினார்.
“இந்த ஒப்பந்தத்தில் அனைவரும் வெற்றியாளர்கள், அமைதிக்கு வெற்றி, மனிதகுலத்திற்கு வெற்றி” என்றார் அவர். போடோ பிராந்திய மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயிக்க ஆணையம் ஒன்று உருவாக்கப்படும்.
போடோ பிராந்திய மாவட்டங்களான கோக்ரஜார், சிராங், பக்சா, உடல்குரி ஆகியவை பயனடைய ரூ.1,500 கோடி திட்டத்தையும் பிரதமர் அறிவித்தார். “இது, போடோ கலாச்சாரம், மண்டலம், கல்வி ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்” என்று அவர் கூறினார்.
போடோ பிராந்திய கவுன்சில் மற்றும் அஸ்ஸாம் அரசின் பொறுப்பை வலியுறுத்திய பிரதமர், வளர்ச்சியின் நோக்கம், அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரையும் அரவணைப்போம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.
“இன்று போடோ பகுதியில் புதிய நம்பிக்கைகளும், புதிய கனவுகளும், புதிய உணர்வுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் அனைவரின் பொறுப்பும் அதிகரித்துள்ளது. இங்குள்ள அனைத்து சமூகத்தினரையும் இணைத்து, புதியதொரு வளர்ச்சி மாதிரியை போடோ பிராந்திய கவுன்சில் உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். இது, அஸ்ஸாமை வலுப்படுத்தும். இந்தியாவின், ஒரு வலுவான இந்தியாவின் உணர்வை வலுப்படுத்தும்” என்று பிரதமர் தெரிவித்தார்.
அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஆறாவது பிரிவை அமல்படுத்த தமது அரசு விரும்புவதாக கூறிய பிரதமர், குழுவின் அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது என்றார்.
வடகிழக்கு சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைக் கையாள தமது அரசு புதிய அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தப் பிராந்தியத்தின் விருப்பங்களையும், உணர்ச்சிமயமான பிரச்சினைகளையும், ஆழமாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இத்தகைய அணுகுமுறை சாத்தியமாகும்.
“சம்மந்தப்பட்ட அனைவருடனும் அனுதாபத்துடனும், விவாதிப்பதன் மூலம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளியார்கள் அல்ல, நம்மவர்கள் என கருதப்பட்டு ஏற்பட்டுள்ள தீர்வாகும். இவர்கள் அனைவரும் நம்மவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக இவர்களுடன் நாங்கள் உரையாடினோம். இதுவே தீவிரவாதத்தைக் குறைப்பதற்கு உதவி செய்தது. ஏற்கனவே வடகிழக்கில் தீவிரவாதம் காரணமாக ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இப்போது, நிலைமை இயல்பாகவும், அமைதியாகவும் உள்ளது”.
“கடந்த 3–4 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள ஒட்டுமொத்த ரயில்பாதையும், அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. வடகிழக்கில் கல்வி, திறன், விளையாட்டு ஆகியவற்றுக்குப் புதிய கல்வி நிறுவனங்களுடன் இளைஞர்களை வலுப்படுத்த கவனம் செலுத்தப்படுகிறது. இதுதவிர, வடகிழக்கின் மாணவர்களுக்கு தில்லியிலும், பெங்களூருவிலும் புதிய விடுதிகள் கட்டப்பட்டுள்ளன” என்று பிரதமர் தெரிவித்தார்.
அடிப்படை கட்டமைப்பு என்பதன் பொருள், கற்களின் சிமெண்ட்டின் இணைப்பு மட்டுமல்ல என்று பிரதமர் கூறினார். இதில், மனித உழைப்பும் இருக்கிறது. தங்களுக்காக சிலர் அக்கறை கொள்கிறார்கள் என்ற உணர்வை இது மக்களுக்கு உருவாக்குகிறது.
“பல தசாப்தங்களாக நிறைவேற்றப்படாத போகிபீல் பாலம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள், தொடர்பு வசதியைப் பெறும்போது, அரசின் மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது. இத்தகைய வளர்ச்சி, பிரிவினையிலிருந்து இணைப்புக்கான திருப்பத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பிணைப்பு இருக்கும்போது, ஒவ்வொருவருக்கும் சமமான வளர்ச்சி கிடைக்க தொடங்கும்போது, அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற தயாராகிறார்கள். மக்கள் ஒருங்கிணைந்து பணியாற்றத் தயாரானால், மிகப் பெரிய பிரச்சினைகளும் கூட தீர்க்கப்படுகின்றன” என்று பிரதமர் தெரிவித்தார்.
******
(Release ID: 1603118)
Visitor Counter : 190