சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதிய வகை கொரோனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உயர்நிலை அமைச்சர்கள் குழு ஆய்வு

Posted On: 13 FEB 2020 2:14PM by PIB Chennai

புதிய வகை கொரோனா வைரஸ் (தற்போது உலக சுகாதார அமைப்பினால் கோவிட்-19 எனப் பெரிடப்பட்டுள்ளது) தொடர்பான ஆய்வு, கண்காணிப்பு, மதிப்பீட்டுக்கென பிரதமர் உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயர்நிலை அமைச்சர்கள் குழுவின் 2-ஆவது கூட்டம் இன்று (13.02.2020) புதுதில்லியில் நடைபெற்றது.  மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் திரு.ஹர்தீப் சிங் பூரி, டாக்டர் எஸ் ஜெய்சங்கர், திரு. நித்யானந்த ராய், திரு மான்சுக் மண்டாவியா, திரு அஸ்வினி குமார் சௌபே ஆகியோர் பங்கேற்றனர்.

     கோவிட்-19 சார்ந்த தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர்கள் குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.  கேரள மாநிலத்தில் இந்த வைரஸ் பாதித்த 3 பேரின் தற்போதைய உடல்நிலை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.  இந்தியாவில் கோவிட்-19 நோய் மேலாண்மை மற்றும் தடுப்பு, சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணியருக்கும் வீசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது, மற்றும் பயணத்தடை குறித்த ஆலோசனைகள் உள்ளிட்ட  நடவடிக்கைகள் குறித்தும் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டது. 

     வூகானிலிருந்து வெளியேற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட 645 பேருக்கான இரண்டு தனிமைக் கண்காணிப்பு மையங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.  ஆயுதப்படையினர் மற்றும் இந்தியா-திபெத் எல்லைக் காவல்படை ஆகியோரால் பராமரிக்கப்படும் இந்த முகாம்களில் உள்ளவர்கள் அனைவருக்கும் தினசரி மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. முகாமில் உள்ளவர்கள் எவருக்கும் கோவிட்-19 பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

     இன்றைய நிலவரப்படி மொத்தம் 2,315 விமானங்களில் பயணம் செய்த 2,49,447 பயணியரிடம் சோதனை நடத்தப்பட்டது, 21 விமான நிலையங்கள், சர்வதேச கடல்துறைமுகங்கள், எல்லைகளில் குறிப்பாக நேபாள எல்லையில் பயணியரிடம் சோதனை நடத்தப்பட்டது தொடர்பான விவரங்கள் அமைச்சர்கள் குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டது.  சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து  தவிர ஜப்பான், தென்கொரியா நாடுகளிலிருந்து வரும் அனைத்து விமானங்களும் மொத்தமாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.   34 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் 15,991 பேர் சமுதாய கண்காணிப்பின்கீழ், வைக்கப்பட்டுள்ளனர். சோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்ட 1,671 மாதிரிகளில் முன்பு அறிவிக்கப்பட்டபடி 3 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனேயில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் தேசிய நுண்கிருமி நிறுவனம், கோவிட்-19 குறித்த நோயறி சோதனைகளின் ஒருங்கிணைப்பு மையமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் 14 மண்டல சோதனைக்கூடங்கள் மாதிரிகளைச் சோதிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

     தனிநபர் பாதுகாப்பு கருவிகள், கவச முகமூடிகள் ஆகியன போதுமான அளவு இருப்பதாகவும், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை செயலாளர், குடும்ப நலத்துறை செயலாளர் ஆகியோர் தினப்படி உயர்நிலை ஆய்வை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  24 மணிநேரமும் செயல்படும் 011-2397 8046 என்ற தொலைபேசி இலக்கம் கொண்ட கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாகவும், இந்தக் கிருமி தொற்று பற்றிய தகவல்கள் அனைத்து வகை ஊடகங்களிலும் விழிப்புணர்வுக்கென பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பொதுமக்கள் தகவலுக்கென இந்த நோய் குறித்து தினமும் செய்தியாளர் கூட்டத்தை நடத்துவதாகவும் விளக்கப்பட்டது.    

****


(Release ID: 1603085) Visitor Counter : 269