சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நோவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வு
Posted On:
04 FEB 2020 3:47PM by PIB Chennai
நோவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்த நிலை குறித்து, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலாளர் திருமதி ப்ரீத்தி சுதன் இன்று (04.02.2020) காணொலிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். கப்பல் துறை, வெளியுறவு, விமானப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் உள்துறை செயலாளர்களுடனும் அவர் ஆய்வு நடத்தினார்.
மத்திய அரசு அளவில், பல்வேறு அமைச்சகங்களின் நெருங்கிய ஒத்துழைப்புடன் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்தார். நிலைமையை பிரதமர் அலுவலகம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ஆகியோர் உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், அன்றாட நிலவரம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய நிலைமை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய விசா கட்டுப்பாடுகள் / ஆலோசனைகளையும் அவர் எடுத்துரைத்தார். மேலும், இந்த அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார். மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் அதிக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்திய அவர், சுகாதாரத் துறையினருக்கு தேவையான பயிற்சியை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து & ஹாங்காங்கிலிருந்து வரும் பயணிகளை பரிசோதிக்கவும், கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதிசெய்யவும், 7 சர்வதேச விமான நிலையங்களில் (தில்லி, கொல்கத்தா, மும்பை, கொச்சி, பெங்களுரு, ஹைதராபாத் & சென்னை) பிரத்யேக ஏரோ பிரிட்ஜுகள் பயன்படுத்தப்படுவதையும் சுகாதாரத் துறை செயலாளர் சுட்டிக்காட்டினார்.
எத்தகைய நிலைமையையும் சமாளிக்க ஏதுவாக அதிவிரைவு பணிக்குழுவை வலுப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்திய திருமதி ப்ரீத்தி சுதன், மாவட்ட அளவிலும் இதற்கான நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
*************
(Release ID: 1601882)
|