நிதி அமைச்சகம்

விவசாயிகள் மற்றும் வேளாண்துறை வளர்ச்சிக்கான 16 அம்ச செயல்திட்டம்

Posted On: 01 FEB 2020 2:35PM by PIB Chennai

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சியடைவோம்” மற்றும் இந்திய மக்களின் “வாழ்க்கையை எளிதாக்குவோம்” என்ற பிரதமரின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், தோட்டக்கலை வளர்ச்சி, உணவுப்பொருள் சேமிப்பு, கால்நடை மற்றும் நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான 16 அம்ச செயல்திட்டம் ஒன்றை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று தமது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்

2022-க்குகள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில், பிரதமரின் குசும் திட்டத்தை விரிவுப்படுத்தி 20 லட்சம் விவசாயிகள் சூரியசக்தி பம்ப்செட்டுகள் அமைக்கப்படுவதுடன், மேலும் 15 லட்சம் விவசாயிகள் தங்களது பம்ப்செட்டுகளை சூரியசக்தியால் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கவும் உதவி அளிக்கப்படும்.

அனைத்து வகையான உரங்களையும் சீராக பயன்படுத்துவதையும், செலவில்லா இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிப்பதுடன், மின்னணு சேமிப்பு கிடங்கு வருவாய் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

மானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறை விரிவுப்படுத்தப்படும்.  பல அடுக்கு பயிர் சாகுபடி, தேனீ வளர்ப்பு, சூரியசக்தி பம்ப்செட்டுகள், சாகுபடி அல்லாத காலங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி போன்றவை மேற்கொள்ளப்படும். தேசிய இயற்கை விளைபொருட்கள் சந்தையான “ஜைவிக் கேத்தி” இணையதளம் வலுப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் விரிவான திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

சேமிப்பு மற்றும் சரக்குகளை எடுத்துச் செல்லுதல்  

சேமிப்பு கிடங்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, உணவு தானியங்கள் வீணாவதைக் குறைக்கும் நோக்கில், வட்டார அளவில் தனியார் பங்களிப்புடன் புதிய சேமிப்பு கிடங்குகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்த திருமதி. நிர்மலா சீதாராமன், இந்திய உணவுக்கழகம் மற்றும் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்றார். சுய உதவிக் குழுவினரால் நிர்வகிக்கப்படும் கிராமப்புற சேமிப்பு கிடங்கு திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர், தான்ய லஷ்மி என்ற கவுரவத்தை மீண்டும் அடைவார்கள்.

பால், இறைச்சி உள்ளிட்ட எளிதில் அழுகும் பொருட்களை சேமிக்க தடையற்ற தேசிய குளிர்பதன விநியோக சங்கிலி தொடர் வசதிகள் உருவாக்கப்படும். எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களில் குளிர்பதன பெட்டிகள் இணைக்கப்படும். வடகிழக்கு மற்றும் பழங்குடியின மாவட்டங்களில் விமானப்போக்குவரத்து துறையால் கிரிஷி உடான் திட்டம் தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

கால்நடை

விவசாயிகளின் வருமானத்தில் கால்நடைகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, கால்நடைகளின் பாதம் மற்றும் வாய்களில் ஏற்படும் ப்ருசெல்லோசிஸ் நோயையும், ஆடுகளுக்கு ஏற்படும் பிபிஆர் நோயையும் 2022ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதுடன், செயற்கை கருவூட்டலை 30 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். 2025ஆம் ஆண்டுக்குள் பால் பதப்படுத்தும் திறனை 53.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 108 மில்லியன் மெட்ரிக் டன்னாக இரட்டிப்பாக்குவதற்கும் உதவி செய்யப்படும் என்று திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

வேளாண் கடன்

2020-21 நிதியாண்டில் ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு நிதி திட்டப் பயனாளிகள் அனைவரும் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தோட்டக்கலை

தோட்டக்கலை பயிர்களுக்கான “சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த, ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற திட்டத்தை பின்பற்றும் மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீல பொருளாதாரம்

ஆழ்கடல் மீன்வள மேம்பாடு, மேலாண்மை மற்றும் பாதுகாப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவதுடன், கடல்பாசி வளர்ப்பும் ஊக்குவிக்கப்பட்டு, 2022-23ல் மீன் ஏற்றுமதி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்றும் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

                                ******


(Release ID: 1601529) Visitor Counter : 286