இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

3-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கவிழா வண்ணமயமாக நடைபெற உள்ளது


37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 20 வகையான விளையாட்டுகளில் 6,800 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்

பசுமை நிகழ்வு என்பதால் விளையாட்டு இடங்களில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன

Posted On: 08 JAN 2020 5:37PM by PIB Chennai

குவஹாத்தியில் 2020 ஜனவரி 10 முதல் 22 வரை நடைபெற உள்ள 3-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. ஜனவரி 10 அன்று இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ள தொடக்க நிகழ்வில் அசாம் முதலமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுகள் துறை  இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ, அசாமின் பெருமிதமாக உள்ள  ஹிமாதாஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

கேலோ இந்தியா விளையாட்டுகள் நிச்சயமாக நாட்டின் இளைஞர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று திரு கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.  3-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வடகிழக்கு மாநிலங்களின் இளைஞர்களிடம் சர்வதேச தரத்திலான விளையாட்டுகள் குறித்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 6,800 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சைக்கிள் போட்டி, லான் பவுல்ஸ் உள்ளிட்ட 20 வகையான விளையாட்டுகளில் இவர்கள் பங்கேற்பார்கள். இந்தப் போட்டிகள் குவஹாத்தியில் எட்டு அரங்கங்களில் நடைபெற உள்ளன. விளையாட்டு வீரர்கள், அலுவலர்கள், தன்னார்வ தொண்டர்கள், உதவியாளர்கள் உட்பட 10,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக புதுமையான ஒளிவிளக்குகளும், தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளன. அசாமின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாரம்பரிய சமூகத்தினரின் நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

பசுமை நிகழ்வு என்பதால் விளையாட்டு இடங்களில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கேலோ இந்தியா கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதோடு அசாம் அரசு ரொக்கப்பரிசுகளையும் அறிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகின்ற விளையாட்டு வீர்ர்கள் , அலுவலர்கள் தங்குவதற்கு நூற்றுக்கும் அதிகமான ஓட்டல்கள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களை வரவேற்க விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வரவேற்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

------



(Release ID: 1598851) Visitor Counter : 285