உள்துறை அமைச்சகம்
நட்பு ரீதியான அண்டை நாடுகளின் எல்லைப்பகுதி நாட்டிற்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை ஆயுத எல்லைப்படை (SSB) உறுதி செய்யும்: திரு. அமித் ஷா
வீரர்கள் குறைந்தபட்சம் 100 நாள் குடும்பத்தினருடன் தங்கியிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை; ஆயுத எல்லைப்படையில் காலியாக உள்ள 12,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: உள்துறை அமைச்சர்
प्रविष्टि तिथि:
19 DEC 2019 3:00PM by PIB Chennai
நட்பு ரீதியான அண்டை நாடுகளின் எல்லைப்பகுதி, நாட்டிற்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை ஆயுத எல்லைப்படை (SSB) உறுதிசெய்யும் வேளையில், எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் பார்த்துக் கொள்ளும் என மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுடன், இந்தியா 2,450 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்தவெளி எல்லைப்பகுதியை கொண்டதாக உள்ளதாகவும், இந்த வழியாக ஒரு ஊடுருவல்காரர் கூட இந்தியாவிற்குள் நுழைந்துவிடாதபடி உறுதிசெய்யும் வகையில் ஆயுத எல்லைப்படை சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
புதுதில்லியில் இன்று, ஆயுத எல்லைப்படையின் 56-வது உதயதின அணிவகுப்பிற்கு தலைமையேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர், கடந்த ஓராண்டில் மட்டும் இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் உட்பட, 50-க்கும் மேற்பட்ட ஊடுருவல்காரர்களை பிடித்ததோடு, ரூ.380 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் பிடித்ததற்காக, இந்தப் படையினருக்கு உள்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு இறுதியில், காலியாக உள்ள 12,000-க்கும் மேற்பட்ட அரசிதழ் பதிவுறு (Gazetted) மற்றும் அரசிதழ் பதிவுறா (Non-Gazetted) பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்றும், இதன் காரணமாக பணி அழுத்தத்திலிருந்து விடுபட்டு, இப்படையினர் மேலும் வலிமையுடன் செயல்பட முடியும் என்றும் திரு.அமித் ஷா குறிப்பிட்டார்.
படைவீரர்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு, எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறிய அவர், வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் குறைந்தது 100 நாட்களாவது தங்கியிருப்பதை அரசு வெகு விரைவில் உறுதி செய்யும் என்றும் தெரிவித்த்தார். நக்ஸலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஆயுத எல்லைப்படை வீரர்களின் குழந்தைகளுக்காக பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு திறன் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள், தங்களது அமைப்பில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் எல்லைப்பகுதி பாதுகாப்பானதாக இல்லாவிட்டால், உலக அளவிலான பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்க முடியாது என்று கூறிய உள்துறை அமைச்சர், நமது அண்டை நாட்டினர் எதிரிகளாக இருந்தால், அடிக்கடி எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஊடுருவல், ஆள்கடத்தல், போதைப் பொருள், கள்ளநோட்டு, கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் பணி மற்றும் இயற்கைச் சீற்றங்களின் போது, மக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாப்பதில், இந்தப் படையினரின் பணி பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய ஆயுதக் காவல்படைகளில் முதன்முதலாக பெண்களை பணியில் அமர்த்தியது ஆயுத எல்லைப்படை என்று குறிப்பிட்ட திரு.அமித் ஷா, இந்தப் படையில் சேர்ந்த பெண் அதிகாரிகள் தங்களது ஆண் சகாக்களுக்கு இணையாக பீடு நடை போடுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக, கிதோர்னியில் உள்ள இந்தப்படையின் 25-வது படைப்பிரிவில் உள்ள வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்திய உள்துறை அமைச்சர், வீர்ர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, வீரதீர செயலுக்கான பதக்கங்களையும் வழங்கினார்.


(रिलीज़ आईडी: 1596956)
आगंतुक पटल : 241