விண்வெளித்துறை

பிஎஸ்எல்வி தனது 50-வது பயணத்தில், ரிசாட் – 2பிஆர்1 மற்றும் 9 வர்த்தக செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2019 5:42PM by PIB Chennai

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்துவாகனம் (பிஎஸ்எல்வி–சி48) தனது 50-வது பயணத்தின் மூலம் ரிசாட்–2பிஆர்1 செயற்கைக்கோள் மற்றும் 9 வர்த்தக செயற்கைக்கோள்களை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்திய நேரப்படி பிற்பகல் மணி 3.25-க்கு முதலாவது செலுத்து தளத்திலிருந்து பிஎஸ்எல்வி–சி48 செலுத்தப்பட்டது.  16 நிமிடங்கள் 23 நொடிகளுக்குப்பின், 576 கிலோமீட்டர் தூரத்தில் ரிசாட்–2பிஆர்1 வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 9 வர்த்தக செயற்கைக்கோள்களும், அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டன. இதன்பின்னர், ரிசாட்–2பிஆர்1 தாமாகவே பெங்களூரில் உள்ள இஸ்ரோ கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துவிட்டது. வரும் நாட்களில் இந்த செயற்கைக்கோள் நிறைவான செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

பிஎஸ்எல்வி செலுத்துவாகனம் 50-வது பயணத்தை வெற்றிகரமாக நடத்தி,   ரிசாட் – 2பிஆர்1 செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி 50 என்ற தொகுப்பு நூலை டாக்டர் சிவன் வெளியிட்டார்.  இந்த செலுத்து வாகனம் 52.7 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணுக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும், இவற்றில் 17 சதவீதம் வெளிநாட்டு வாடிக்கையாளர் செயற்கைக்கோள்கள் என்றும் அவர் கூறினார்.

628 கிலோகிராம் எடை கொண்ட ரிசாட் செயற்கைக்கோள் ராடார் மூலம் புவிப்பரப்பை கண்காணித்துத் தகவல்களை அனுப்பும். வேளாண்மை, வனவளர்ப்பு ஆகியவற்றுக்குப் பயனுள்ள தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற முடியும் என்பதோடு, பேரிடர் நிர்வாகத்திற்கும் உதவிகரமாக இருக்கும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.

இத்துடன் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான ஒன்பது செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட்டன.

நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக ஏற்பாட்டின்படி இவை செலுத்தப்பட்டன.

சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 75-வது முறையாக செயற்கைக்கோள் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பார்வையாளர் தளத்திலிருந்து இந்த நிகழ்வை 7000 பேர் பார்வையிட்டனர்.

 

*****

 (Release ID: 1595929)


(வெளியீட்டு அடையாள எண்: 1595994) வருகையாளர் எண்ணிக்கை : 267
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam