பிரதமர் அலுவலகம்

ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பில் பிரதமர் உரை


கல்வியை மேம்படுத்துவதிலும் குழந்தைகள் மேம்பாட்டிலும் இந்த அமைப்பு ஆற்றிவரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு

ஒரே பாரதம், உன்னத பாரதம் கொள்கைக்கு உத்வேகம் அளிக்க தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை ஜோடிகளாக இணைக்கலாம் என்று பிரதமர் ஆலோசனை

Posted On: 06 DEC 2019 2:41PM by PIB Chennai

குஜராத் மாநிலத்தின் ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் உரையாற்றினார். கிராம, பழங்குடியின குழந்தைகளின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ள “ஏகல் பள்ளி இயக்கத்தை” முன்னின்று நடத்தும் ஏகல் வித்யாலயா பள்ளிகளின் கூட்டமைப்பை பிரதமர் பாராட்டினார். இந்தியாவிலும், நேபாளத்திலும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் 28 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற, பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தேச கட்டுமானத்திற்கு இந்தக் கூட்டமைப்பின் தன்னார்வலர்கள் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுவதாக அவர் கூறினார்.

     நாடெங்கிலும் ஒரு லட்சம் பள்ளிகள் என்ற நிலையை எட்டியதற்காக இந்தக் கூட்டமைப்பிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்,  ஆர்வம், அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டுடன் பணியாற்றினால் இயலாத இலக்குகளையும் அடையக்கூடிய இலக்குகளாக மாற்ற முடியும் என்று கூறினார். சமூக சேவையில் காட்டிய உறுதிப்பாட்டுக்காகவும், நாடு முழுவதற்கும் உத்வேகம் தரக்கூடிய முன்மாதிரியாக இருந்தமைக்காகவும் இந்தக் கூட்டமைப்புக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

     இந்தியாவில் சிறந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மத்திய அரசும் முனைப்புடன் பாடுபட்டு வருவதை பிரதமர் குறிப்பிட்டார். பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏகலைவன் மாதிரி உறைவிடப்பள்ளிகள், ஊட்டச்சத்து இயக்கம், தடுப்பூசி இயக்கம், பழங்குடியின விழாக்களின்போது பள்ளி விடுமுறைகள் ஆகிய அரசுத் திட்டங்களால் பள்ளியிலிருந்து மாணவர்கள் இடைநிற்றல் வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதே சமயம் இவை குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவி உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

     2022ஆம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, தமது பள்ளிகளில், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் ஆற்றிய பங்கு பணிகளை வலியுறுத்தும் வகையில், சிறப்பு குறு நாடகங்கள், இசைப் போட்டிகள், பேச்சுப்போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். இதற்கான ஆரம்பப் போட்டிகளை இந்த ஆண்டே தொடங்கலாம் என்றும் 2020-ஆம் ஆண்டு  தேசிய அளவில், அனைத்தையும் உள்ளடக்கிய இறுதிப்போட்டியை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். ஏகல் குடும்பம், இந்திய பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெறும் கேல் மகாகும்ப விழாவுக்கு (விளையாட்டுப் பெருவிழா) ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

     தனியார் பள்ளிகளையும், அரசுப் பள்ளிகளையும் ஜோடியாக இணைக்கும் கருத்தையும் பிரதமர் வெளியிட்டார். இதன் மூலம் கிராமப்புற பின்னணி உள்ள மாணவர்களும் நகர்ப்புற மாணவர்களும் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற கருத்து ஊக்கம் பெறும் என்றும் அவர் கூறினார். ஏகல் கூட்டமைப்பு, மின்னணு  கல்வி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துவது குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமர், அனைத்து ஏகல் வித்யாலயா பள்ளிகளின் முன்னேற்றத்தையும் விரிவான வகையில் அப்போதைக்கப்போதே கண்காணிப்பதற்கான ஒரு கண்காணிப்பு மின்னணுப் பலகையை  ஏற்படுத்தலாம் என்று ஆலோசனை கூறினார்.

     இன்றைய தினம் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் நினைவு தினமாக உள்ளது என்பதை நினைவுபடுத்திய பிரதமர், இருபால் குழந்தைகளுக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டும் என்ற பாபா சாஹேபின் கனவை நனவாக்குவதில் ஏகல் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்றும் நாற்பதாண்டுகால சேவையில் ஏகல் குடும்பம் தனது “பஞ்ச தந்திர கல்வி மாதிரி” மூலம் புதுமையான சிந்தனைகளை மேம்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார். சத்துணவு தோட்டங்கள் மூலம் ஊட்டச்சத்து மேம்பாடு, விவசாயத்தில் உயிரி உரங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி, மூலிகைகளின் மருத்துவ குணத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறன் பயிற்சியை அளித்தல், வேலைவாய்ப்புக்கான பயிற்சி, சமூக விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியன பஞ்ச தந்திர மாதிரி கல்வியில் அடங்கி உள்ளன என்றும் அவர் கூறினார். கல்வி, காவல், தொழில், ராணுவம் போன்ற பல்வேறு துறைகளில் ஏகல் வித்யாலயா பள்ளிகளில் கற்ற மாணவர்கள் தேசப் பணி ஆற்றி வருவது மனநிறைவைத் தருகிறது என்று பிரதமர் கூறினார்.

     இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், ஏகல் கூட்டமைப்பின் வெற்றி, காந்தியடிகளின் கொள்கைகளான கிராம சுயராஜ்ஜியம், பாபா சாஹேபின் சமூக நீதி, தீன் தயாள் உபாத்யாயாவின் அந்தியோதயா, சுவாமி விவேகானந்தரின் ஒளிரும் இந்தியா கனவு ஆகியவற்றை அடைவதற்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

 

ஏகல் வித்யாலயா பற்றி

     இந்தியாவிலும், நேபாளத்திலும் கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் ஒருங்கிணைந்த முழுமையான மேம்பாட்டை கொண்டுவருவதற்கான இயக்கமே ஏகல் வித்யாலயா. இந்த அமைப்பின் முக்கிய நடவடிக்கை நாடெங்கிலும் தொலைதூர கிராமங்களிலும், பழங்குடியினர் பகுதிகளிலும்  அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவதற்காக ஓராசிரியர் பள்ளிகளை (ஏகல் வித்யாலயாக்கள்) அமைப்பது ஆகும்.

                                          *******



(Release ID: 1595306) Visitor Counter : 203