தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஓய்வூதிய வாரத்தை திரு.சந்தோஷ் கங்வார் தொடங்கி வைத்தார்

Posted On: 30 NOV 2019 1:19PM by PIB Chennai

பிரதமரின் முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் முதியோர் நல நிதித் திட்டம், வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் உறுப்பினர்களை சேர்க்கும் இயக்கத்திற்காக நவம்பர் 30, 2019-லிருந்து டிசம்பர் 6, 2019 வரை ஓய்வூதிய வாரம் கொண்டாட மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குள் பிரதமரின் முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் முதியோர் நல நிதி திட்டத்தில் 1 கோடி பேரையும், வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 80 லட்சம் பேரையும் இணைக்கும் நோக்கம் கொண்ட ஓய்வூதிய வாரத்தைத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.சந்தோஷ் கங்வார் இன்று தொடங்கி வைத்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஓய்வூதிய வாரத்தில் 10 கோடி ஆயுஷ்மான் பயனாளிகள், 11 கோடி மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், 4-5 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள், 2-5 கோடி சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், 40 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள், 10 லட்சம் ஆஷா பணியாளர்கள் ஆகியோரிடையே இந்த ஓய்வூதியத் திட்டங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் இணைய ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு வங்கி / ஜன்தன் கணக்கு மட்டும் இருந்தால் போதுமானது என்று அமைச்சர் கூறினார். இந்தத் திட்டத்தில் சேர 2 அல்லது 3 நிமிட நேரம் போதுமானது என்று அவர் குறிப்பிட்டார். பயனாளியின் வயதைப் பொறுத்து மாதாந்திர பங்களிப்பு ரூ.55-லிருந்து ரூ.200 வரை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

30 வயதுள்ள ஒருவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் அவரது மாதாந்திர பங்களிப்பு ரூ.100 ஆக இருக்கும். இதன்படி ஆண்டுக்கு அவர் ரூ.1200 செலுத்துவார். அவருக்கு 60 வயது நிறையும் வரை அவர் செலுத்த வேண்டிய தொகை ரூ.36,000. ஆனால் அவர் 60 வயது நிறைந்த பின் ஓய்வூதியமாக ஓராண்டிலேயே ரூ.36,000 பெற்று விடுவார் என்ற விவரத்தையும் அமைச்சர் தெரிவித்தார்.

ஓய்வூதியம் பெறுபவர் இறக்க நேரிட்டால் அவரது மனைவிக்கு 50 சதவீதம் அதாவது ரூ.1500 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

****



(Release ID: 1594378) Visitor Counter : 155