பிரதமர் அலுவலகம்

பிரிக்ஸ் வணிக அமைப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 14 NOV 2019 7:45AM by PIB Chennai

பிரிக்ஸ் வணிக அமைப்பில் சிறப்புமிக்க பங்கேற்பார்களே

 

வணக்கம்

 

பிரிக்ஸ் வணிக அமைப்பில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த அமைப்பின் நிகழ்ச்சியோடு தொடங்கியுள்ளது. பிரேசில் அதிபரையும் இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர்களையும் வணிகத்திற்கு முன்னுரிமை அளித்துப் பங்கேற்றுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

 

நண்பர்களே

 

உலகின் பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளின் கணக்கு 50 சதவீதமாக உள்ளது. உலகில் மந்தநிலை ஏற்பட்டுள்ள போதும் பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தி உள்ளன. லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளன. தொழில்நுட்பத்திலும், புதிய கண்டுபிடிப்பிலும் சாதனைகளைப் படைத்துள்ளன. பிரிக்ஸ் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பின் நமது எதிர்கால முயற்சிகளுக்கான திசைவழி பற்றி விவாதிக்க இந்த அமைப்பு நல்லதொரு மேடையாக உள்ளது.

 

நண்பர்களே,

 

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வணிகத்தை எளிமையாக்குவது பரஸ்பர வர்த்தகத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும். நமக்கு இடையேயான வரி மற்றும் சுங்கவரி நடைமுறைகள் 5 நாடுகளில் எளிதாக உள்ளன. அறிவுசார் சொத்துரிமைகள், வங்கிகள் இடையேயான ஒத்துழைப்பால் வணிகச் சூழல் எளிதாகியிருக்கிறது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகளால் முழு ஆதாயத்தைப் பெறுவதற்குத் தேவையான வணிக முன்முயற்சிகள் பற்றிய ஆய்வை பிரிக்ஸ் வணிக அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வணிகம் மற்றும் முதலீட்டு இலக்குகள் ஊக்கமளிப்பவையாக இருக்க வேண்டும். நம்மிடையேயான வர்த்தக செலவை மேலும் குறைப்பதற்கு உதவுவதாக உங்களின் யோசனைகள் இருக்க வேண்டும்.

 

நம்மிடையே அடையாளம் காணப்படும் முன்னுரிமை வணிகப் பகுதிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியவையாக இருக்க வேண்டும் என்றும், அந்த அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நகல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

நமது சந்தையின் அளவும், பன்முகத்தன்மையும் நமது சார்புகளும் ஒருவருக்கொருவர் மிகவும் பயனுடையதாக உள்ளன. எடுத்துக்காட்டாக பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு நாட்டில் தொழில்நுட்பம் இருந்தால் மற்றொன்றில் அது தொடர்பான கச்சாப் பொருட்கள் அல்லது சந்தைகள் இருக்கும். மின்சார வாகனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், உரம், வேளாண் பொருட்கள், உணவு பதனம் உள்ளிட்டவற்றில் இத்தகைய வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய சார்புகளுக்கான திட்டத்தை 5 நாடுகளில் உருவாக்க இந்த அமைப்பை நான் வலியுறுத்துகிறேன். சார்புகள் அடிப்படையில் கூட்டு முயற்சிகளை நம்மிடையே உருவாக்க முடியும் என்பதால் அடுத்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குள் குறைந்தபட்சம் 5 பகுதிகளையாவது அடையாளம் காண வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

 

கடின உழைப்பு, திறமை, உருவாக்கம் போன்றவற்றில் பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் பெயர்பெற்றவர்கள். புதிய கண்டுபிடிப்புக்கான பிரிக்ஸ் வலைப்பின்னல், எதிர்கால வலைப்பின்னலுக்கான பிரிக்ஸ் நிறுவனம் போன்ற முக்கியமான முன்முயற்சிகள் நாளைய மாநாட்டில் பரிசீலிக்கப்படும். மனித ஆற்றல்களில் கவனம் குவிக்கும் இத்தகைய முயற்சிகளில் தனியார் துறையினரும் இணைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய முன்முயற்சிகளில் இளம் தொழில்முனைவோரை இணைப்பது வணிகத்திற்கும், புதிய கண்டுபிடிப்புக்கும் கூடுதல் பலத்தை வழங்கும்.

 

நண்பர்களே,

 

நமது நாடுகளுக்கு இடையே மிகவும் எளிதாக மேற்கொள்வதற்கு சாத்தியமானவையாக சுற்றுலா, வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவை உள்ளன. விசா இல்லாமல் இந்தியர்கள் வருவதற்கு வாய்ப்பளித்த பிரேசில் அதிபருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். 5 நாடுகளைக் கொண்டுள்ள நாம் பரஸ்பர சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றியும் பரிசீலிக்க வேண்டும்.

 

நண்பர்களே,

 

எளிதாக வணிகம் செய்வது, பொருட்கள் ஏற்றுமதி செயல்பாடு, உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றுக்கான தரவரிசைக் குறியீடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கால வரம்பு காரணமாக சுருக்கமாக நான் கூற விரும்புவது என்னவென்றால், அரசியல் ஸ்திரத்தன்மை, திட்டமிட்ட கொள்கை, வணிகத்திற்கு ஏதுவான சீர்திருத்தங்கள் காரணமாக உலகிலேயே மிகவும் வெளிப்படையான முதலீட்டுக்கு உகந்த பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது என்பதாகும். 2024-க்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் 1.5 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படுகிறது. இந்தியா ஏராளமான சாத்தியங்களையும், எண்ணற்ற வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது. இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவிற்கு வருகைதந்து கட்டமைக்கவும், வளர்ச்சியடையவும் பிரிக்ஸ் நாடுகளின் வணிக அமைப்புகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

 

உங்களுக்கு மிகவும் நன்றி

 

***


(Release ID: 1592399) Visitor Counter : 168