பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க இருப்பதையொட்டி நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்

மாநிலங்களவையின் 250-வது கூட்டத் தொடர் என்பதால் இந்தக் கூட்டத் தொடர் சிறப்பு வாய்ந்தது: பிரதமர்

Posted On: 17 NOV 2019 2:11PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார். அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும்  இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பான அவரவர் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

பிரதமர் தமது உரையின் போது, நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடர் மாநிலங்களவையின் 250-வது கூட்டத் தொடர் என்பதால் இது ஒரு சிறப்புமிக்க கூட்டத் தொடராக அமைந்துள்ளது என்றும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டில் உள்ள ஆளுமை அமைப்புகளுக்கு, வளைந்து கொடுக்கக் கூடிய கட்டமைப்புகளை வழங்கும் இந்திய நாடாளுமன்றம் மற்றும் அரசியல் சட்டத்தின் தனித்துவமிக்க, வலிமையை பறைச்சாற்றக் கூடிய வாய்ப்பை வழங்குவதாக மாநிலங்களவையின் 250-வது கூட்டத் தொடர் திகழ வேண்டுமென்று பிரதமர் வலியுறுத்தினார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுவது மற்றொரு சிறப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய சில பிரச்சனைகளுக்கு பதிலளித்த பிரதமர், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றவும், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு, பொருளாதாரம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் பிரச்சனை, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகள் தொடர்பான கொள்கைகளை வகுப்பதில், அனைத்துக் கட்சிகளுடனும் ஒருங்கிணைந்து ஆக்கப்பூர்வமான முறையில் அரசு பாடுபடும் என்றார்.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தியதற்காக, இரு அவைகளின் தலைவர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்த பிரதமர், இது மக்களிடையே நாடாளுமன்ற செயல்பாடு பற்றி நன்மதிப்பை ஏற்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார். அந்த வகையில், நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உற்சாகத்துடன் பல்வேறு விவாதங்களில் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு இந்தக் கூட்டத் தொடரையும் பயனுள்ளதாகவும், வெற்றிகரமானதாகவும் ஆக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

***



(Release ID: 1591861) Visitor Counter : 106