பிரதமர் அலுவலகம்

கர்தார்பூர் விரைவுச் சாலையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியைப் பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்

Posted On: 08 NOV 2019 2:34PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில், கர்தார்பூர் விரைவுச் சாலையில் தேரா பாபா நானக்கில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை நாளை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சுல்தான்பூர் லோதியில் உள்ள பெர் சாஹிப் குருத்வாராவில் பிரதமர் வழிபாடு நடத்துவார்.

பின்னர், பிரதமர் தேரா பாபா நானக்கின் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார்.  

ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி தொடங்கப்படுவதால், இந்திய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் உள்ள குருத்துவாரா கர்தார்பூர் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள வழி ஏற்படும்.

சர்வதேச எல்லையான தேரா பாபா நானக்கில், கர்தார்பூர் விரைவுச் சாலையைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள்  குறித்த பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தில் இந்தியா 2019 அக்டோபர் 24-ம் தேதி கையெழுத்திட்டுள்ளது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் தேவ்ஜியின் 550-வது பிறந்த நாளை, மிகச்சிறப்பான முறையில் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடுவதற்கு 2018-ஆம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது நினைவு கூரத்தக்கது. 

கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பாசாகிப்புக்கு ஆண்டு முழுவதும் இந்திய யாத்ரீகர்கள் எளிய மற்றும் சுமூகமான  முறையில் சென்று வருவதற்காக, தேரா பாபா நானக்-கிலிருந்து சர்வதேச எல்லை வரை கர்த்தார்பூர் சாகிப் விரைவுச் சாலையை அமைத்து மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

                            

யாத்ரீகர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள்

அமிர்தசரஸ் – குர்தாஸ்பூர் நெடுஞ்சாலையிலிருந்து தேரா பாபா நானக்-கை இணைக்கும் 4.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி நெடுஞ்சாலை ரூ.120 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

     15 ஏக்கர் நிலப்பரப்பில் அதிநவீன பயணிகள் முனையக்  கட்டடம் கட்டப்பட்டுள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு அருகே ஐம்பது குடியுரிமை கவுண்டர்களுடன், நாள் ஒன்றுக்கு 5,000 பேரை அனுப்பக் கூடிய அளவிலான விமான நிலையமும் அமைந்துள்ளது.

 

     கடைகள், கழிவறைகள், குழந்தைகள் பாதுகாப்பு, முதலுதவி உள்ளிட்ட மருத்துவ வசதிகள், வழிபாட்டு அறை, சிற்றுண்டி நிலையங்கள் ஆகிய மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்தக் கட்டடத்தில் உள்ளன. 

    

     சிசிடிவி கண்காணிப்பு, அறிவிப்பு செய்வதற்கான வசதிகளுடன் முழுமையான பாதுகாப்புக் கட்டமைப்பு ஏற்பட்டுள்ளது.

     சர்வதேச எல்லையில், 300 அடியில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் அக்டோபர் 24-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம், கர்தார்பூர் சாகிப் விரைவுச் சாலையில், முறையான வழிகாட்டுதல்களுடன் இயக்குவதற்கான கட்டமைப்புக்கு  வகை செய்கிறது.

 

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்    

  • அனைத்து மத நம்பிக்கைக் கொண்ட இந்திய யாத்ரீகர்கள், இந்திய வம்சாவழியினர் இந்தச் சாலையைப் பயன்படுத்தலாம்.
  • இதில் பயணிக்க விசா  தேவையில்லை
  • செல்லத்தக்க பாஸ்போர்ட்டை மட்டும் பயணிகள் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
  • இந்திய வம்சாவழியினர் பாஸ்போர்ட்டுடன் தங்கள் ஓசிஐ  அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும்
  • சாலை, காலை முதல் மாலை வரை திறந்திருக்கும். காலையில் செல்லும் பயணிகள் அதே நாளில் திரும்பிவிட வேண்டும்
  • அறிவிக்கப்பட்ட நாட்களைத் தவிர சாலை ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். மூடும் நாட்கள் முன்பே அறிவிக்கப்படும்
  • பயணிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிக்கலாம். நடந்தும் பயணம் மேற்கொள்ளலாம்.
  • பயண நாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு, பயணிகளின் பட்டியலை இந்தியா அனுப்பும். பயணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக பயணம் உறுதி செய்யப்படும்.
  • இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்காக போதுமான அளவுக்கு உணவு மற்றும் பிரசாதம் வழங்க பாகிஸ்தான் தரப்பு உறுதியளித்துள்ளது.

பதிவு செய்வதற்கான இணையதளம்

 

     யாத்ரீகர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைன் மூலம் prakashpurb550.mha.gov.in என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தங்கள் பயணத் தேதியையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும். பதிவு செய்த பின்னர்,  பயணத் தேதி மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பாக குறுந்தகவல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும். மின்னணு பயண அங்கீகாரம் ஒன்றும் உருவாக்கப்படும்.  பயணிகள் முனையக் கட்டடத்திற்கு வரும்போது, அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் மின்னணு பயண அங்கீகாரத்தைக் கொண்டு வரவேண்டும்.



(Release ID: 1591034) Visitor Counter : 130