பிரதமர் அலுவலகம்
சவுதி அரேபியாவில் பிரதமர் மேற்கொண்ட பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
Posted On:
29 OCT 2019 9:30PM by PIB Chennai
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத்-ன் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி, சவுதி அரேபியாவிற்கு அக்டோபர் 29-ந் தேதி அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
இருதரப்பு பேச்சுவார்த்தையில், இரண்டு நட்பு நாடுகளையும், அவற்றின் மக்களையும் இணைக்கும் வரலாற்று ரீதியிலான நெருங்கிய உறவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து இரு நாடுகளும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான பொருளாதாரம், சமுதாயம், கலாச்சாரம், நாகரீக உறவுகளில் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுகளை இருதரப்பினரும் அடிகோடிட்டுக் காட்டினர். இரண்டு நட்பு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வலுவான உத்வேகத்தை அளிக்கக் கூடிய சிறந்த பொதுவான வாய்ப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டன.
2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ரியாத் பிரகடனம், இருதரப்பும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆழமான ஈடுபாட்டுடன் செயல்படுவது எனத் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் இந்தியப் பயணம் மேற்கொண்டபோதும், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போதும், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் துணைப் பிரதமரின் புதுதில்லி பயணத்தின் போதும் இது வலியுறுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சிலை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து இருதரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளன. இதற்கான ஆவணத்தில் சவுதி அரேபியாவின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான பட்டத்து இளவரசரும், இந்தியத் தரப்பில் பிரதமரும் கையெழுத்திட்டனர். இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து இருதரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளன.
இருதரப்பு உறவுகள் வலுவடைந்துள்ளதற்கு, சில ஆண்டுகளாக அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மனித ஆற்றல், மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே காரணம் என இருதரப்பும் பாராட்டுத் தெரிவித்துள்ளன. உலகில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான பொறுப்புணர்வின் அடிப்படையில் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உயர்மட்டக் கலந்தாலோசனையும், ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருப்பதாக இருதரப்பும் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் இந்தியப் பிரதமரை சந்தித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். 2016 ஆம் ஆண்டு பிரதமர் மேற்கொண்ட ரியாத் பயணம் மற்றும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத், துணைப் பிரதமர் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்தியப் பயணத்திற்கு பின்னர் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு முன்னேற்றம் கண்டிருப்பதை இரு தலைவர்களும் புகழ்ந்துரைத்தனர். இந்த உறவு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் வலுப்படுத்தப்பட்ட கூட்டுறவை பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வலுப்படுத்தி உள்ளது. இது இந்த இரு நட்பு நாடுகளுக்கும், அதன் மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதாகும்.
இருதரப்பும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து விவாதித்தன. நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என இருதரப்பும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. அதே போல நாடுகளின் இறையாண்மை மீதான எந்தவிதமான தாக்குதலையும் தடுப்பது குறித்த பொறுப்புணர்வை சர்வதேச சமுதாயம் செயல்படுத்த வேண்டியதின் அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்தின. சிரியாவில் உள்ள நிலை குறித்த பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஏமன் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், அதன் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை, ஏமன் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டியதன் அவசியம், அது தொடர்பான பாதுகாப்புச் சபை தீர்மானம் ஆகியவற்றை இருதரப்பும் வலியுறுத்தி உள்ளன. ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு 1967 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனம் சுதந்திர நாடாகத் திகழவும், அந்நாட்டு மக்களுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்கும் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தல், ஐ.நா. தீர்மானம், அரேபிய சமாதான முன்முயற்சி அடிப்படையிலான அமைதிச்சூழல் நிலவ வேண்டுமென்று இருதரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இந்தியக் கடற்பகுதி மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நீர்வழிகளை பாதிக்கக் கூடிய எந்தவித அச்சுறுத்தலுக்கும் இடம் கொடுக்காமல் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிகளை மேம்படுத்தும் இருதரப்பு கண்காணிப்பு அவசியம் என்பதை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
பயங்கரவாதமும், தீவிரவாதமும் அனைத்து நாடுகளையும், சமுதாயங்களையும் அச்சுறுத்தி வருவதை இருநாடுகளும் சுட்டிக் காட்டி உள்ளன. இதனை, குறிப்பிட்ட இனம், மதம் மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்பு படுத்தும் முயற்சியை அவை நிராகரித்தன. அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் நிராகரித்துள்ள இரு நாடுகளும் பயங்கரவாதிகளுக்கு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வழங்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுத்து அதன் விநியோகத்தை தடுக்க வேண்டியதன் அவசியத்தை இரு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன.
சவுதி அரேபியாவில் தனியார் அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை இந்திய தரப்பு கண்டித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்பு மையத்தின் நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என இருதரப்பும் வலியுறுத்தி உள்ளன. தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு, குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில், பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க கூட்டு முயற்சிகள் தேவை என இரு நாடுகளும் வலியுறுத்தி உள்ளன.
இரு நாடுகளிலும் ஆக்கப்பூர்வமான பொருளாதார மாற்றங்கள் தொடர்வதை இருதரப்பும் குறிப்பிட்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பை நவீனப்படுத்த, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவை வலியுறுத்தி உள்ளன. அண்மைக் காலமாக இருதரப்பு வர்த்தகத்தின் நேர்மறையான போக்கு குறித்து அவை மகிழ்ச்சித் தெரிவித்துள்ளன. 2030 ஆம் ஆண்டில் சவுதி அரேபிய தொலைநோக்கு அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இருநாடுகளையும் சேர்ந்த தொழில் துறையினர் இரு நாடுகளிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று இருதரப்பும் வலியுறுத்தி உள்ளன. குறிப்பாக உள்கட்டமைப்பு, சுரங்கத் தொழில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட எரிசக்தித் துறை, விவசாயம், தொழில்நுட்ப பரிமாற்றம், மற்றும் தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு துறையில் காணப்படும் ஆற்றல் வாய்ந்த மனித வளம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வது அவசியம் என இருதரப்பும் குறிப்பிட்டுள்ளன.
இந்தப் பயணத்தின் போது எரிசக்தி, சிவில் விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு, ரூபே அட்டைகள் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மருத்துவ உற்பத்தியை முறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
பயணத்தின் முடிவில் இந்தியப் பிரதமர் தமக்கும், தம்முடன் சென்ற பிரதிநிதிக் குழுவுக்கும் சவுதி அரேபிய அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பல் குறித்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 2020 ஆம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டிற்கு தலைமை பொறுப்பு ஏற்கும் சவுதி அரேபியாவை வரவேற்றுள்ள பிரதமர் அதற்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளார். ரியாத்தில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அடுத்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறினார். ஜி-20 அமைப்பின் வரம்புக்குள் சவுதி அரேபியா மேற்கொண்டுள்ள சிறப்பான முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு தமது வாழ்த்துகளை சவுதி அரேபிய மன்னர் தெரிவித்துக் கொண்டுள்ளார். நேசம் நிறைந்த இந்திய மக்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் நட்புறவு மற்றும் அதன் மக்களின் நலன்களுக்கு தொண்டாற்ற இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்களில் பரஸ்பர நன்மை ஆகியவை குறித்த ஆலோசனைகள் மற்றும் விவாதங்களை முழுமைப்படுத்தும் வகையில், இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் விடுத்த அழைப்பை சவுதி அரேபிய மன்னர் வரவேற்றுள்ளார்.
***
(Release ID: 1589597)
Visitor Counter : 176